;
Athirady Tamil News

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் புதிய வியூகம்- பாரதிய ஜனதா முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

0

தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். தெலுங்கானாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே யார் ஆட்சியை பிடிப்பது எனும் போட்டி கடுமையாக உள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி தற்போது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியாக தேசிய அவதாரம் எடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்கி, அக்கூட்டணி மத்தியில் ஆட்சி செய்ய வேண்டும் என தேசிய அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தெலுங்கானாவில் இவர் மீதும், இவரது ஆட்சி மீதும் சற்று அதிருப்தி நிலவி வருகிறது. என்றாலும், இவருக்கு எம்.ஐ.எம். கட்சி மறைமுகமாக ஆதரவு தருவதாலும், தெலுங்கானாவில் முஸ்லிம்களின் வாக்கு அதிகம் இருப்பதாலும், சந்திரசேகர ராவே 3-வது முறையாக முதல்வராக ஆட்சி அமைப்பார் என கூறப்படுகிறது. ஆனால், தெலுங்கானாவில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்து, இதுவரை நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், 46 இடங்களில் வெற்றி பெற்று ஐதராபாத்தில் 2-வது செல்வாக்கு மிக்க கட்சியாக பா.ஜ.க. தன்னை வெளிப்படுத்தி கொண்டது.

காங்கிரஸ் தான் தனது எதிரி என்பதை இதன் மூலம் சந்திரசேகர ராவ் மாற்றி கொண்டு, பா.ஜ.க.வை குறிவைக்க தொடங்கினார். ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டதும் அங்கு மீண்டும் காங்கிரசாருக்கு புத்துயிர் பிறந்தது போல் ஆனது. இதனை தொடர்ந்து அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பா.ஜ.க. வை வீழ்ச்சி அடைய செய்து, காங்கிரஸ் வெற்றி பெற்றதால், தெலுங்கானா காங்கிரஸாருக்கு புதிய உற்சாகம் பிறந்துள்ளது. இம்முறை கண்டிப்பாக தெலுங்கானாவையும் நாம் தான் கைப்பற்றுவோம் என காங்கிரஸ் கட்சியினர் மார்தட்டி கூறும் அளவிற்கு சென்று விட்டது. இந்நிலையில், பா.ஜ.க. , தெலுங்கானா தலைமையை மாற்றியது. மாநில தலைவராக இருந்த பண்டி சஞ்சய்க்கு பதில், மத்திய இணை மந்திரி கிஷண் ரெட்டியை தெலுங்கானா மாநில தலைவராக அறிவித்தது.

இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆகர்ஷ் தெலுங்கானா எனும் திட்டத்தின் கீழ் முக்கிய பிரபலங்களை பா.ஜ.க.வில் இழுக்கும் படலம் தொடங்கி விட்டது. இந்நிலையில்தான் நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்தார். இதனை தொடர்ந்து, வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இதில், மூத்த நடிகை விஜயசாந்தி மேதக் தொகுதியிலும், நடிகை ஜெயசுதா செகந்திராபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை மந்திரி கிஷண் ரெட்டி அம்பர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

இது தவிர வேணு கோபால் ரெட்டி, முரளிதர ராவ், இந்திர சேனா ரெட்டி, விவேக், இந்திர லட்சுமி நாராயணா, ராமச்சந்திர ராவ், பிரபாகர், ஆச்சாரி, மகேஸ்வர ரெட்டி, ராத்தூர் ரமேஷ், பாபு மோகன், ஸ்ரீகாந்த், விஸ்வேஸ்வர ராவ், மகேஸ்வர் ரெட்டி, நரசைய்யா கவுட், பிரதீப் ராய், ராகேஷ் ரெட்டி, ஹரிஷ் பாபு, சத்திய நாராயணா, கிஷன் ரெட்டி, லட்சுமண், பண்டி சஞ்சய், ஷோயம் பாபுராவ், ஈட்ல ராஜேந்தர், ரகுவந்தன் ராவ், டி.கே. அருணா, ஜிதேந்திரா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வரும் தேர்தலில் “டார்கெட் 75” என்ற இலக்கு நிர்ணயித்து பா.ஜ.க.வினர் 75 இடங்களில் வெற்றி பெற வேண்டுமென பா.ஜ.க. தலைவர் அமித்ஷா நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி உள்ளார். 2-ம் கட்டமாக 45 பேர் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.