சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 3 ஆயுள் தண்டனை- போக்சோ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!!
சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் நூல்புழாவில் இருக்கும் கோயாலிபுரா பழங்குடியினர் குடியிருப்பில் உள்ள தேலம்பட்டா பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது54). இவர் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அதனை கூறியே மிரட்டி பல முறை சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறார். அதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி தாக்கவும் செய்திருக்கிறார். இந்த தாக்குதலில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் சிறுமியின் கண் பாதிக்கப்பட்டது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து சுல்தான் பச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை பலாத்காரம் செய்த கணபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு கல்பெட்டா போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட கணபதிக்கு பாலியல் வன்கொடுமை, சித்ரவதை, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, 3 ஆயுள் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.