லெபனானில் கலவரம்: தங்கள் நாட்டினர் கவனமாக இருக்க பல்வேறு நாடுகள் அறிவுறுத்தல்!!
மேற்கு ஆசியாவில் உள்ள நாடு லெபனான். Powered By VDO.AI Video Player is loading. அங்கு 12-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய நாட்டு அகதிகளுக்கான முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் மிக பெரியது ஐன் எல்-ஹில்வே (Ain el-Hilweh) முகாம். லெபனான் முழுவதும் உள்ள சுமார் 2.5 லட்சம் பாலஸ்தீனிய அகதிகளில் சுமார் 80 ஆயிரம் பேர் ஐன் எல்-ஹில்வே முகாமில் வாழ்கின்றனர். இதில் பதிவு செய்யப்பட்ட அகதிகள் மட்டுமே சுமார் 63 ஆயிரம் பேர் இருப்பார்கள் என ஐ.நா. கூறுகிறது. லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள சிடான் நகரத்திற்கருகே இந்த முகாம் உள்ளது. இப்பகுதி லெபனான் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளதால், அங்குள்ள முகாம்வாசிகளின் பாதுகாப்பை அவர்கள்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அங்கு அடிக்கடி மோதல்கள் நடைபெறும். கடந்த ஜூலை 29 முதல் இங்கு இருதரப்பினரிடையே மோதல்கள் தொடங்கியது. இதில், இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடையலாம் என்பதால் சில உலக நாடுகள் தங்கள் நாட்டினர் லெபனானுக்கு செல்ல கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. சவுதி அரேபியா நேற்று லெபனானில் வசிக்கும் தன் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறது. மேலும் அங்கிருந்து வெளியேறும் வரை ஆயுத மோதல்கள் நடக்கும் பகுதிகளை நெருங்குவதைத் தவிர்க்கவும் தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது. லெபனானில் உள்ள சவுதி தூதரகம் ஒரு அறிக்கையில், லெபனான் நாட்டிற்கு பயணத்தடையை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டிருந்தாலும் எந்தெந்த பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கவில்லை.
இதேபோல் குவைத், லெபனானில் வசிக்கும் தன் நாட்டு மக்களை அங்கு கவனமுடன் இருக்குமாறும், ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவித்திருக்கிறது. ஆனால், தற்போதுவரை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடவில்லை. பிரிட்டன், தன் நாட்டிலிருந்து லெபனானுக்கு செல்ல விரும்புவர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் லெபனானின் தெற்கின் சில பகுதியான ஐன் எல்-ஹில்வே முகாமுக்கு அருகில் “அத்தியாவசிய பயணம் மட்டுமே” மேற்கொள்ளுமாறும், பிற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. “இந்த சண்டை தொடரக்கூடாது.
இதனால் ஏற்படும் விளைவுகள் முகாமில் வசிப்பவர்களுக்கும், பாலஸ்தீனிய மக்களுக்கும், அனைவருக்கும் மோசமானதாக இருக்கும். மோதலை நிறுத்துங்கள். மோதலை நிறுத்த யாராவது அழுத்தம் கொடுக்க முடியும் என்றால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்” என லெபனான் நாட்டின் ஷியா பிரிவு அரசியல் கட்சியாகவும், ராணுவ குழுவாகவும் திகழும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் அசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார். அங்குள்ள முகாம்களில் நடைபெறும் வன்முறையால் அவற்றில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓடிவிட்டனர் என 4 நாட்களுக்கு முன் ஐ.நா. தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.