பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 200 பேர் கைது!!
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்ரான் கானின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், காவல்துறை பிடிஐ கட்சி தொண்டர்களை கைது செய்தது மட்டுமல்லாமல், கட்சி அலுவலக ஊழியர்களின் வீடுகளையும் சோதனையிட்டதாக பிடிஐ குற்றம் சாட்டியுள்ளது. 10க்கும் மேற்பட்ட இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இம்ரான் கான் அட்டோக் சிறையில் மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிறையில் அவரை சந்தித்த அவரது வழக்கறிஞர் கூறுகையில், ‘ஈக்களை வரவைப்பதற்காக சிறை அதிகாரிகள் இனிப்புகளை அறைக்குள் வீசியதால் தூங்க முடியாமல் தவிப்பதாக இம்ரான் கான் கூறுகிறார். இதுதவிர, அவர் வீட்டில் இருந்து உணவு மற்றும் தொழுகை செய்வதற்கான தரைவிரிப்பு கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. திறந்த கழிப்பறை உள்ளது’ என்றார்.