;
Athirady Tamil News

சிங்களவர்களின் பிரச்சினைகளை பாருங்கள்!!

0

தமிழ்,முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துவதை போல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினமாக வாழும் சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

அங்கு மேலும் தெரிவித்த விமல் எம்.பி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அப்பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

அந்த மாகாணங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பிரதிநிதிகளுக்கு ஏதும் பிரச்சினை இல்லையா, திஸ்ஸ விகாரை பிரச்சினை, முல்லைத்தீவு குருந்தூர் பிரச்சினை என பல பிரச்சினை காணப்படுகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன அடிப்படையில் வேறுபாடு காண்பிக்காமல் சகல தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்.

குறித்த மாகாணங்களில் உள்ள பிரச்சினைகளை ஓர் இனத்துக்கு மாத்திரம் வரையறுப்பது தவறு. அங்கு சிறுபான்மையினத்தவர்களாக வாழும் சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்து இந்த சபையில் எவரும் பேசுவது இல்லை. அந்த மாகாணங்களில் வாழும் சிங்களவர்களை புறக்கணிக்க வேண்டாம்” என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் பிரச்சினைகள் குறித்து என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் தான் இன்று விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று தான் இவர் ஆரம்பித்துள்ளார். ஆகவே சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் அதில் பிரச்சினையொன்றும் இல்லை” என்றார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.