யாழ்.ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு!! (PHOTOS)
யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் குழந்தையொன்றின் தலையுடன் கூடிய பகுதிகளவிலான சடலம் ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறமாக குறித்த குழந்தையின் சடலம் இனங்காணப்பட்டு, வீட்டாரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , சடலம் மீட்கப்பட்ட காணிக்கு மிக அண்மையில் கோம்பயன் மணல் இந்து மயானம் உள்ள நிலையில் மயானத்தில் இருந்து குறித்த உடல் பகுதிகள் இங்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த சில நாட்களில் உயிரிழக்கும் குழந்தைகளின் சடலங்கள் கோம்பயன்மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுவதாகவும் அவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்ட சடலம் உரிய முறையில் புதைக்காது விட்டமையால் நாய்கள் கிளறி இருக்கலாம் என வலுவான சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் மயானத்தின் பின்புறம் சில கிடங்குகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார், ஊரவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.