நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பாராளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் பயத்தில் பாதியில் ஓடிவிட்டனர்- பிரதமர் மோடி பேச்சு!!
பா.ஜனதா கட்சியின் பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சி மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் நடந்தது. இதில் பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது:- பாராளுமன்றத்தில் நாம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து, நாடு முழுவதும் எதிர்மறை கருத்துக்களை பரப்பியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து பாதியில் வெளியேறினர். அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க பயந்தனர் என்பது தான் உண்மை. மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. மணிப்பூர் மக்களின் வலியை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மணிப்பூரை சூறையாடி உள்ளனர். மணிப்பூர் குறித்த விவகாரத்தை அவர்கள் விரும்பவில்லை. மணிப்பூரை வைத்து அரசியல் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள்.
பல விவகாரங்கள் குறித்து பேசும் அவர்கள் மணிப்பூரை மட்டும் பேசவில்லை. மணிப்பூர் மீது எதிர்க் கட்சிகளுக்கு அக்கறை கிடையாது. மேற்கு வங்க மாநில உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வேட்புமனு தாக்கலை தடுத்து நிறுத்தினர். மேற்கு வங்காளத்தில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ரத்தக்களரி அரசியலை பின்பற்றுகிறது.
மேற்கு வங்காளத்தில் ரத்தத்தில் அரசியல் நடத்துகிறது. எந்த ஒரு பா.ஜனதா வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்பதற்காக எதையும் செய்தனர். பா.ஜனதாவினரை மட்டு மல்ல வாக்காளர்களையும் மிரட்டினர். வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆட்களை ஏற்பாடு செய்தனர். இது தான் அவர்கள் மாநிலத்தில் செய்யும் அரசியலின் விதம். இவ்வாறு அவர் பேசினார்.