சீனாவில் கடும் மழை- நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!!
சீனாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சீனாவின் வடக்கு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். தொடர் மழையால் சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மழை நீடித்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை சீனாவில் 78 பேர் இறந்து விட்டனர். பலர் மாயமாகி விட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வடக்கு சீனாவின் ஜியான்ஸ் நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்தது. அந்த வீடுகளில் இருந்த 2 பேர் மீது மண் விழுந்து அமுக்கியதால் பரிதாபமாக இறந்தனர்.
இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று நிலச்சரிவில் புதைந்து போன வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் 16 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.