சரத் பவார்- அஜித் பவார் ரகசிய சந்திப்பு: மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு!!
மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும், அவருடன் சென்ற 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராக பதவி ஏற்றனர்.
இதனால் சரத் பவார்- அஜித் பவார் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் இருந்தும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. பா.ஜனதா- ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தற்போது ஆட்சியில் உள்ளன. ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக நீடிப்பாரா? என்ற கேள்வி கடந்த சில வாரங்களுக்கு முன் எழுந்தது.
பின்னர் அவர்தான் நீட்டிப்பார் என பா.ஜனதா உறுதியாக கூறியதால், அந்த பிரச்சனை அப்படியே அமர்ந்தது. இந்த நிலையில் நேற்று சரத் பவார்- அஜித் பவார் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு மகாராஷ்டிர அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு புனேவில் உள்ள தொழில் அதிபர் அதுல் சோர்டியா பங்களாவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அமேல் மிட்கரி கூறுகையில் ”இரு தலைவர்களுடைய சந்திப்பு, குடும்பம் தொடர்பானதாக இருந்திருக்கும்” என்றார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ. அதுல் பட்கால்கர் ”இதுகுறித்து ஜெயந்த் பாட்டீல் மற்றும் பவார்களிடம், சந்திப்பு குறித்து கேட்டால் சிறந்ததாக இருக்கும்” என்றார். தேசியவாத காங்கிரசில் 54 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இவர்கள் சரத் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது, அஜித் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. சிவசேனா கட்சியில் இருந்து 40 எல்.எல்.ஏ.-க்களுடன் பிரிந்து ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் இணைந்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து துணை முதல்வராகியுள்ளார்.