மகாராஷ்டிராவில் சோகம் – 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி!!
மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர் என்றும், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத் குற்றம்சாட்டினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. இந்நிலையில், அந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களில் சிலர் முதியவர்கள் எனவும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தானே மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பாங்கர் கூறுகையில், கல்வா மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள். 8 பேர் ஆண்கள். இந்தச் சம்பவம் குறித்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே விசாரித்தார். அவர் நோயாளிகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை ஆணையர் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார். முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இது சாதாரண விஷயமல்ல. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் இறந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.