உடல் எடையை அதிகரிப்பது எப்படி? என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?!
உடல் எடையைக் குறைப்பது எப்படி என்பதுதான் இன்று அதிகமாகக் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது.
அதேநேரம், உடல் எடை குறைவாக உள்ளவர்கள், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை எப்படிக் கூட்டுவது என்பதற்கான வழிகளையும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பார்க்கப்போனால், உடல் எடையைக் குறைப்பது எளிது. அதற்குப் பல தீர்வுகளும் வழிகளும் உள்ளன. ஆனால், உடல் எடையை அதிகரிப்பது ஒரு சவாலாக இருக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது. உடலில் ஏதாவது ஒவ்வாமை இருக்கிறதா, சில உணவுகளைச் சாப்பிட்டால் வயிற்றில் சிக்கல் வருகிறதா, அதன்பின் பசி எடுக்காமல் போகிறதா என்பன பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும்.
உணவில் தரமான எண்ணெய்களைச் சேர்த்துக்கொள்ள முயல வேண்டும். அதற்காக உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் உலர் பழங்களை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படும்.
இதற்கு ஓர் எளிய வழி உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் லட்டு செய்து சாப்பிடுவது. அவற்றை நெய்யில் வறுத்து அதனுடன் வெல்லம் கலந்து லட்டு போன்ற உருண்டையாக்கிச் சாப்பிடுவது செரிமானத்திற்கு நல்லது.