செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்!!
கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி செந்தில்பாலாஜியை கைது செய்தது. இதன்பின்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தது. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வாக இருப்பதால் அவர் மீதான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும். அந்த அடிப்படையில், இந்த வழக்கை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டு உள்ளார். சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் செந்தில்பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க வாய்ப்பு உள்ளது.
குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதும் சாட்சி விசாரணை உள்ளிட்ட அடுத்தகட்ட விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் உள்ள வழக்குகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகளிலும் செந்தில்பாலாஜி மீது அடுத்த மாதம் இறுதிக்குள் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.