இந்திய முஸ்லீம்களில் பலர்.. சர்ச்சையை ஏற்படுத்திய குலாம் நபி ஆசாத்..!!
இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானோர், இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறியவர்கள் தான் என்று குலாம் நபி ஆசாத் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான காஷ்மீர் பண்டிதர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதை பார்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார். அரசியல் லாபத்திற்காக மதத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து இருக்கும் குலாம் நபி ஆசாத், “சில பா.ஜ.க. தலைவர் முஸ்லீம்கள் வெளியில் இருந்து வந்துள்ளனர் என்று தெரிவித்தார். யாரும் வெளியில் இருந்து உள்ளே வரவில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தான் இஸ்லாம் வந்துள்ளது. இந்து மதம் தான் மிகவும் பழைமை வாய்ந்தது.
முஸ்லீம்களில் 10 முதல் 20 பேர் தான் வெளியில் இருந்து வந்துள்ளனர், சிலர் முகலாய படையில் இருந்தவர்கள்,” என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். “மற்ற முஸ்லீம்கள் அனைவரும் இந்துவாக இருந்து, முஸ்லீமாக மாறியுள்ளனர். இதற்கான எடுத்துக்காட்டை காஷ்மீரில் காணலாம். 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் யார் முஸ்லீம்களாக இருந்தனர்? அனைவரும் காஷ்மீரி பண்டிட்களாகவே இருந்தனர். அவர்கள் இஸ்லாமிற்கு மாறிவிட்டனர். அவர்கள் பிறக்கும் போதே, இந்த மதத்தில் தான் இருந்தனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.