யுக்ரேன் போரில் பாதிக்கப்பட்டோருக்காக இந்தப் பெண் என்ன செய்கிறார் தெரியுமா?
“எப்போது தாக்குதல் தொடங்கினாலும், நான் தானாகவே அதிக கோபத்துடன் திட்ட ஆரம்பித்துவிடுவேன்,” என்று சொல்லி இன்னா போச்சருக் சிரிக்கிறார்.
இந்த வழியில் உங்களை வெளிப்படுத்துவது மட்டுமே ஆரோக்கியமான எதிர்வினையாக இருக்கமுடியும் என்று 45 வயதான அவர் கூறுகிறார். ஏனெனில் “கோபம் செயலுக்கான ஆற்றலுக்கு சமம்” என்பது மட்டுமின்றி எங்களது தனிப்பட்ட எல்லைகளைப் பாதுகாக்க எங்களுக்கு அது உதவும்.
ரஷ்யாவுடனான போரின்போது யுக்ரேனில் ஒரு மருத்துவ சிகிச்சையாளராக, அவர் துக்கம், குற்ற உணர்வு, கோபம், பயம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்க சிகிச்சை அளிக்கிறார். ஆனால் அதற்காக அவருக்கு அதுபோன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை எனக் கருத முடியாது.
அவரும் பத்துக்கும் மேற்பட்ட வேறு சிலரும் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு முறை ஜூம் செயலி மூலம் சந்திக்கிறார்கள். வைஃபை இணைப்புகள் இருப்பதால் இது சாத்தியமாகிறது.
பரஸ்பர ஆதரவை வழங்கவும், லண்டனில் உள்ள இரண்டு மருத்துவ சிகிச்சையாளர்களிடமிருந்து இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமைகிறது. இவர்களுக்குள் ஒரே பாலமாக இருப்பவர் யுக்ரேனின் மொழி பெயர்ப்பாளரான மேக்ஸ் தான்.
“இந்தப் போர் நடவடிக்கைகள் மிகவும் கடினமான விஷயமாக இருக்கின்றன என்பதுடன் நீடித்த, முழு அளவிலான மரண அச்சுறுத்தலாகவும் உள்ளன,” என்கிறார் ஸ்வெட்லானா கோவல் (47), என்ற மற்றொரு மருத்துவ சிகிச்சையாளர்.
போரால் அவர் தனது வயதான தாயைப் பிரிந்து சொந்த ஊரை விட்டு வெளியேறி ஒடெசா நகரத்திற்குச் செல்ல நேர்ந்திருக்கிறது. அவரது தாயாருக்கு ஆதரவளிக்க பலர் இருந்தாலும் ஒவ்வொரு முறை பேசும்போதும் அவர் நம்பிக்கையற்றவராகவே உணர்கிறார்.
உடனடியாகச் செய்துவிட எதுவுமில்லை. ஆனால் பொழுதுபோக்குகள், சிகிச்சை மற்றும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் ஸ்வெட்லானாவுக்கு உதவுகின்றன.
“நான் இரண்டு ஆண்டுகளாக பால்ரூம் நடனம் ஆடுகிறேன்,” என்று அவர் சிரித்தார். “ஆனால் இங்கே இருக்கும் சமூகம் மிகக் குறைவான ஆண்களைக் கொண்ட ஒரு சிறிய சமூகம். பலர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.”
கடினமான காலங்களில் சிறிய மகிழ்ச்சிகள் சாதாரணமானவை அல்ல என்று மருத்துவ சிகிச்சையாளர்கள் கூறுகிறார்கள். யோகா, தோட்டக்கலை மற்றும் தேநீர் குடிப்பது ஆகியவை தங்களைக் கவனித்துக் கொள்வதற்கு, அவர்களுக்குப் பிடித்தமான சில வழிகள்.
உலகில் எல்லா பகுதிகளிலும் இருப்பதைப் போலவே இவை அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆனால் போரின்போது மகிழ்ச்சியாக இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் பிபிசியிடம் கூறுகிறார்கள்.
ஏனென்றால் நிறைய யுக்ரேனியர்கள் மற்றவர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பால்ரூம் நடனம் போன்ற பொழுதுபோக்குகள் தனது பதற்றத்திலிருந்து வெளியேற உதவுவதாக ஸ்வெட்லானா கோவல் கூறுகிறார்.
‘ஏதாவது ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்’
“ரஷ்யாவை சேர்ந்த அனைவருடனும் எனக்கு இருந்த அனைத்து உறவுகளையும் நான் துண்டித்துக் கொண்டேன். எனக்கு அவ்வளவு கோபம். அந்த உறவுகளைத் தொடர நான் தயாராக இல்லை,” என்று 20 வயதிற்குட்பட்ட உளவியல் மாணவியான லாரிசா கூறுகிறார். (அவருடைய பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
போர் தொடங்கியதில் இருந்து ஆழமான ரஷ்ய எதிர்ப்பு உணர்வு அதிகமாகப் பரவி பல உறவுகளை அழித்துவிட்டது.
இது உளவியலில் “பிளவு” அல்லது “கருப்பு-வெள்ளை சிந்தனை” என்று அழைக்கப்படுகிறது. இது தங்களையும் பாதித்ததாக இந்த மருத்துவ சிகிச்சையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
“இரண்டு நாற்காலிகளுக்கு இடையில் ஒரு நடுப் பிளவை நான் பார்ப்பது போல் உள்ளது. மேலும், இந்தப் பிளவில் நான் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, அந்த உறவுகளில் இருந்து விலகியிருக்க, நான் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்கிறார் ஸ்வெட்லானா.
“நான் விடைபெற வேண்டிய ரஷ்ய சகாக்கள் இருந்தனர். நான் அவர்களுடன் வேலை செய்ய முடியாது. ஏனென்றால் தீமையிலிருந்து நன்மையைப் பிரிக்க முடியாத அவர்களின் நடத்தையில் நான் தவறுகளைக் காண்கிறேன்.”
இதுபோன்ற உணர்வுகள் பரவலாக இருப்பதாகப் பலரும் கூறுகின்றனர். “நீங்கள் வன்முறையை நியாயப்படுத்தினால், பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வாறு பணியாற்ற முடியும்?” மற்றொரு குழு உறுப்பினர் கேட்கிறார்.
சில மருத்துவ சிகிச்சையாளர்கள், இந்த கோபம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மற்றும் அவரது ராணுவத்தின் மீது காட்டப்படும் என்று சொல்ல முடியாது என்றும் கூறுகின்றனர்.
ஆனால் மற்றவர்கள், இந்த கருப்பு-வெள்ளை சிந்தனை, கடுமையான ஆபத்தில் இருந்து தப்பிக்க மக்களுக்கு உதவுவதற்காக உருவானது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
“மூளையின் அமிக்டாலா என்ற பகுதி ஒரு தீ எச்சரிக்கை போன்றது – இது சண்டை, முடக்கம், பதட்டம் போன்ற என்ற உணர்வுகளுடன் தொடர்புடையது. ” என்று லாரிசா விளக்குகிறார்.
எங்கள் நாடு போரில் சிக்கியிருக்கும் போது, ஒரு மருத்துவ சிகிச்சையாளராக இருப்பதில் ஒரு முரண்பாடான எண்ணம் உள்ளது.
சிகிச்சையின் குறிக்கோள், மக்கள் பல விஷயங்களை உணர்ந்து அவற்றைச் சமாளிக்கும் வகையில் செயல்படவைப்பது என்றால், அதே பாதுகாப்புகள் உண்மையில் உங்களை உயிருடன் வைத்திருக்கக்கூடிய ஒரு திகிலூட்டும் மற்றும் அதிர்ச்சிகரமான சூழலுடன் எப்படி நாம் சமரசம் செய்துகொள்ள முடியும்?
ஷெல் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் மற்றும் மின்சாரம் துண்டிப்பது போன்ற காரணங்களால் சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையவழியில் சிகிச்சை அளிப்பதற்கு பெரும் இடையூறாக அமைந்துவிடுகின்றன என்று இந்த சிகிச்சையாளர்கள் பிபிசியிடம் கூறுகிறார்கள்.
ஆனால், உடல்நலக் கோளாறுகளில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கடினமான உணர்வுகளுடன் உட்கார்ந்து சிகிச்சை பெற பாதுகாப்பான இடத்தை வழங்குவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
“நாங்கள் வெல்வோம், எங்களுக்கு சிறிது காலம் தேவை. எவ்வளவு காலம் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று ஸ்வெட்லானா கூறுகிறார்.
ஒரு நாள் போர் முடியும். ஆனால் உளவியல் பாதிப்பு பல தலைமுறைகளுக்கு நீடிக்கும்.
மருத்துவ சிகிச்சையாளர்கள் பிபிசியிடம், தாங்கள் சிகிச்சை அளிக்கும் நபர்களைப் போன்ற சில அதிர்ச்சிகளை அனுபவிப்பதாகவும் கூறுகிறார்கள். இருப்பினும் அவர்கள் சொந்த உணர்வுகளை தங்கள் நோயாளிகளிடம் வெளிப்படுத்த விரும்புவதில்லை.
இந்த மருத்துவ சிகிச்சைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தனது மகனை இழந்துவிட்டதாக கூறுகிறார். அவரது துக்கம் இன்னும் அப்படியே முழுமையாக அவரைப் பாதித்து வருகிறது. அதைப் பற்றிப் பேசுவது அவருக்கு கடினமான செயலாக இருக்கிறது.
‘எனது பணிகள் என்னை உற்சாகப்படுத்துகின்றன’
இந்த மருத்துவ சிகிச்சையாளர்களுக்கு பணம் என்பது மற்றொரு கவலையாக இருக்கிறது. இவர்கள் அனைவரும், நோயாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை போர் சூறையாடியபோது அவர்களுக்கு இலவசமாக உதவினார்கள்.
இன்னா போச்சருக் முழுநேரப் பணியாளராக இருப்பதால் ஊதியம் பெறுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
“எனது வேலையை நான் விரும்புகிறேன், அது என்னை சோர்வடையச் செய்யவில்லை, அது உண்மையில் என்னை உற்சாகப்படுத்துகிறது. நேற்று நான் ஒரு குழுவை வழிநடத்தினேன். மக்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை உணறும் வகையில், அவர்களிடம் இருந்து இரவு 11 மணி வரை குறுஞ்செய்திகள் வந்தன.”
லாரிசா சர்வதேச இதழ்கள் மற்றும் பிராண்டுகளுக்கான புகைப்பட ஆசிரியராக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அண்மையில் ஒரு தனியார் உளவியல் சிகிச்சை நிலையத்தை அமைத்துள்ளார். இந்த நிலையத்தின் மூலம், மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் அளிக்கப்படுகின்றன. பெரும்பாலும் இந்த சேவைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
“எனது சிகிச்சைத் தொழிலை நடத்தும் போது, அனைத்து சிகிச்சையாளர்களுக்கும் பணம் செலவழிக்கவேண்டியிருப்பதால் எனக்கு அதில் இருந்து எந்த வருமானமும் இல்லை. இதனால் எனது கணவர் என்னை கேலி செய்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக போர் தொடங்கியதற்கு முன் எங்களிடம் சில சேமிப்புகள் இருந்தன. மேலும் என் கணவருக்கு ஒரு நிலையான ஊதியம் கிடைக்கிறது.”
மருத்துவ சிகிச்சையாளர்கள் தங்கள் பணி இன்றியமையாதது என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர். அதே நேரம் அவர்களுக்கு ஊதியம் கிடைத்தால் அதை வைத்துக்கொண்டு மேலும் பல போர் வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவ முடியும் என்பதையும் அவர்கள் உணரத் தவறவில்லை.
“இதுதான் நம்மைத் தாக்கும் நபர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்துகிறது. மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது மனிதநேயத்தின் ஒரு வடிவம்” என்கிறார் லாரிசா.
“நான் அதைச் செய்யும்போது, நான் ஒரு மனிதப் பிறவியாக உணர்கிறேன்.”