சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகருக்கு அடி-உதை: பீகார் வாலிபர்கள் கைது!!
பெங்களூர்-டானாப்பூர் இடையே சங்கமித்ரா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் பெங்களூரில் இருந்து டானப்பூர் நோக்கி சங்கமித்ரா ரெயில் சென்றது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயிலில் ஆந்திராவை சேர்ந்த சுதீர் என்பவர் டிக்கெட் பரிசோதகராக இருந்தார்.ரெயிலில் உள்ள முன்பதிவு பெட்டியில் சுதீர் பயணிகளின் டிக்கெட்டை பரிசோதனை செய்தார். அப்போது பீகார் வாலிபர்கள் 10 பேர் சாதாரண டிக்கெட்டில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தது தெரிய வந்தது. முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பீகார் வாலிபர்களை சாதாரண பெட்டிக்கு செல்லுமாறு சுதீர் தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பீகார் வாலிபர்கள் சுதீரை சரமாரியாக தாக்கி அவரது சட்டையை கிழித்தனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தையும் பறித்தனர். இதுகுறித்து சுதீர் அருகில் உள்ள ஓங்கோல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.ரெயில் ஓங்கோல் ரெயில் நிலையத்தில் நின்றபோது பீகார் வாலிபர்கள் 6 பேர் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினர். இதையடுத்து தயார் நிலையில் இருந்த ரெயில்வே போலீசார் 4 வாலிபர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.