கோட்டாவில் அதிகரிக்கும் தற்கொலைகள்: குழு அமைத்து விசாரிக்க ராஜஸ்தான் முதல்வர் உத்தரவு!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு, தேசிய அளவிலான தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதிகள், பேயிங் கெஸ்டுகளில் தங்கி ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதேசமயம், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் 15 மாணவர்கள் தூக்குப்போட்டு உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சம்பவம் மேலும் பரபரபப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கோட்டாவில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலை சம்பவம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். மேலும், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்களையும் அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ” மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த குழு 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் கூறப்பட்டுள்ளது. ஐஐடி, நீட் தேர்வுகளுக்கு தயாராவதற்காக ஏற்கனவே பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் 9ம் மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பயிற்சி மையங்களை சேர்த்துவிட்டு மிகுந்த சுமையை ஏற்படுத்துகின்றனர். இது முழுக்க முழுக்க பெற்றோர் செய்யும் தவறு. இளம் பருவத்தினர் தற்கொலை செய்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு உயிரிழப்பும் பெற்றோர்களுக்கு பெரிய இழப்புதான்” என்றார். மேலும், பயிற்சி மையங்கள் காசு பார்க்கும் இயந்திரமாக இருக்கக்கூடாது என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சஹிதா கான் தெரிவித்துள்ளார்.