;
Athirady Tamil News

கிரீஸ் நாட்டில் சோகம் – பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் உடல் கருகி பலி!!

0

கிரீஸ் நாட்டில் கோடைகாலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமான நிகழ்வுதான். காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வெப்ப அலை, வறண்ட மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளால் சமீபத்திய ஆண்டுகளில் காட்டுத்தீயின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து வெப்ப அலை மற்றும் பலத்த காற்று வீசுவதால் காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.

குறிப்பாக வட கிழக்கு பகுதியில் காட்டுத்தீயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள வடமேற்கு ஏவ்ராஸ் பகுதியில் உள்ள டாடியா வனப்பகுதியின் அருகே 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியானது, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்து வரக்கூடிய மக்கள், துருக்கியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆற்றைக் கடந்து செல்வதற்கான முக்கிய பாதையாக இருப்பதால், உயிரிழந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. அப்பகுதியில் வசிப்பவர்கள் யாரும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்படவில்லை என்பதால், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குடியேறிகளின் சடலங்களாக இருக்கலாம். இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.