பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கக்கன்’ படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்- முதலமைச்சருக்கு ரஞ்சன்குமார் வேண்டுகோள்!!
தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தியாக சீலர் கக்கன் வாழ்க்கை வரலாற்றை திரைக்காவியமாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அரசியலில் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்த கக்கனின் வாழ்க்கை வரலாற்றை இளைய சமுதா யத்தினர் அறிந்து கொள்கிற வகையில் சிறப்பான திரைக்கதையுடன் கூடிய காட்சியமைப்புகளுடன் இத்திரைக் காவியத்தை ஜோசப் பேபி தயாரித்து, நடித்து தமிழ்ச் சமுதாயத்திற்கு படைத்து உள்ளார்.
தமிழக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலன், உள்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கக்கன் வகித்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளதை இத்திரைப்படம் மூலம் காண முடிகிறது. இத்திரைப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் வரிவிலக்கு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
வெறுப்பு அரசியல் மற்றும் சுயநல அரசியலால் ஆர்வமில்லாமல் ஒதுங்கி நிற்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இத்திரைக் காவியத்தை கொண்டு சேர்க்கும் வகையில் மாநகராட்சி, அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுகளிக்கின்ற வகையில், தமிழக கல்வித்துறை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இத்திரைப்படத்தை காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.