கால்களால் மிதித்து உணவு தயாரித்த சம்பவம், வீடியோ வைரல் – மாணவர்கள் போராட்டம்!!
இந்தியாவின் வடக்கில் உள்ள மாநிலம் அரியானா. இங்குள்ள தொழில்துறையில் பிரசித்தி பெற்ற பல்வேறு உற்பத்தி சாலைகளை உள்ளடக்கிய மாவட்டம் சோனிபெட். இங்கு புகழ் பெற்ற ஓ.பி. ஜிண்டால் குளோபல் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது.
2009-ல், இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரான நவீன் ஜிண்டால், தனது தந்தையான ஓ.பி. ஜிண்டால் நினைவாக சேவை நோக்கில் இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கினார். இந்த பல்கலைகழகத்தில் 12 கல்வி நிறுவனங்கள் மூலமாக சட்டக்கல்வி, கலை, அறிவியல், வணிக மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் 45 கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுளிலிருந்தும் இங்கேயே தங்கி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அங்கேயே தங்கி கல்வி பயிலும் மாணவர்களின் உணவு சேவையை தனியார் அமைப்பான சொடெக்சோ நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த விடுதி மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் கூடத்தில் எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. அதில், ஒரு மிக பெரிய அண்டாவில் மிக அதிகமான அளவில் வேக வைத்த உருளைக்கிழங்குகளை கைகளாலோ, இயந்திரங்களாலோ பிசைவதற்கு பதிலாக ஒரு அரை டிராயர், தொப்பி மற்றும் சட்டை அணிந்த பணியாளர் கால்களாலேயே நசுக்குகிறார்.
இந்த வீடியோவின் பின்னணியில், “நான் இங்கு இனிமேல் உணவு உண்ண மாட்டேன்” என ஒருவர் உரக்க கூறுவதும் கேட்கிறது. இந்த சுகாதாரமற்ற செயலை வீடியோவில் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இச்செயலை எதிர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்து அங்கு உணவு உண்ண மறுத்தனர். இதனையடுத்து பலகலைக்கழக நிர்வாகம், இந்த சம்பவம் குறித்த சொடெக்சோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது.