;
Athirady Tamil News

ஆதித்யா எல்1: 15 லட்சம் கி.மீ. தொலைவில் இருந்தபடி இந்திய செயற்கைக்கோள்களை எப்படி காப்பாற்றும்?

0

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டுள்ளது.

இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

ஆதித்யா – எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் , “ஆதித்யா-எல்1 திட்டத்தை மேற்கொள்வதற்காக மிகவும் வித்தியாசமான பணி அணுகுமுறையை செய்த பிஎஸ்எல்விக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இனி, மிஷன் அதன் பயணத்தை எல்1 புள்ளியில் இருந்து தொடங்கும். இது கிட்டத்தட்ட 125 நாட்களைக் கொண்ட மிக நீண்ட பயணம்,” என்றார்.

ஆதித்யா-எல்1 விண்கல திட்டத்தின் இயக்குநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர் சாஜி பேசுகையில், “கனவு நிஜமாகி உள்ளதைப் போன்ற நிலை இது. பிஎஸ்எல்வி மூலம் ஆதித்யா-எல்1 விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது.

அது 125 நாட்களுக்கான தனது நீண்ட பயணத்தை ஆதித்யா-எல்1 தொடங்கியுள்ளது. ஆதித்யா-எல்1 பயன்பாட்டுக்கு வந்தவுடன், அது நாட்டிற்கும் உலக அறிவியல் சகோதரத்துவத்திற்கும் ஒரு சொத்தாக இருக்கும். இந்தப் பணியை சாத்தியமாக்குவதற்கு ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கிய முழு குழுவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.

ஆதித்யா என்பதற்கு சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் சூரியன் என்று பொருள். எல்1 என்பது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே இரண்டின் ஈர்ப்பு விசையும் சமநிலையில் இருக்கும்

நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலம் ஒன்றை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று இந்தியா பெற்றது.

இது நடந்த ஒரே வாரத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காகவும் ஒரு விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது.

சூரியன் மட்டுமே பூமிக்கு மிக அருகில் 15 கோடி கி.மீ உள்ள நட்சத்திரம். சூரிய மண்டலத்தின் நடுவே கொப்பளித்துக் கொண்டிருக்கும் இந்த வாயுப் பந்துதான் இங்குள்ள அனைத்துக் கோள்களுக்குமான ஆற்றல் ஆதாரமாகச் செயல்படுகிறது.

பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு ஏதுவான சுற்றுச்சூழல் உருவாகவே சூரியனின் இருப்புதான் ஒரு மிக முக்கியக் காரணம்.

இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த சூரியனில் ஆய்வு செய்வது நமது கேலக்ஸி மற்றும் பேரண்ட குறித்த பல புரிதல்களை ஏற்படுத்தும் என்று இந்தத் திட்டம் குறித்த இஸ்ரோவின் கையேடு குறிப்பிடுகிறது.

ஆதித்யா-எல்1 இன்று முதல் சுமார் நான்கு மாதங்கள் பயணித்து பூமிக்கும் புதன் கோளுக்கும் நடுவே, 15 லட்சம் கி.மீ தொலைவில் இருக்கும் எல்1 புள்ளியில் நிலைகொள்ளும்.

இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் ஆதித்யா-எல்1 விண்கலத்தை பூமியின் நீள்வட்டப் பாதைக்குக் கொண்டு செல்லும். அங்கிருந்து சந்திரயான் திட்டங்களில் செய்ததைப் போலவே பூமியைச் சுற்றி வரும் ஆதித்யா, இறுதிக்கட்ட நீள்வட்டப் பாதையை அடைந்ததும் விண்வெளியிலேயே அதற்கு உந்துவிசை கொடுக்கப்பட்டு அங்கிருந்து எல்1 புள்ளியை நோக்கித் தள்ளப்படும்.

அதைத் தொடர்ந்து, பூமியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணப்படும்.

இப்படியாக நான்கு மாதப் பயணத்தில் எல்1 புள்ளியை அடையும் ஆதித்யா-எல்1 விண்கலம், மேலிருந்து கீழாக எல்1 புள்ளியில் சுற்றிக்கொண்டே சூரியன் குறித்த தனது ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கும்.

எல்1 எனப்படும் புள்ளியிலிருந்து சூரியனை இந்த விண்கலத்தால் தொடர்ந்து அவதானிக்க முடியும். கிரகணங்களின்போது சூரியனை நிலவு மறைத்தாலும் அது ஆதித்யா-எல்1 விண்கலத்தின் கண்களில் இருந்து மறைய முடியாது.

ஆகவே, அதனால் சூரியனின் செயல்பாடுகளை முற்றிலுமாக ஆய்வு செய்ய முடியும்.

இஸ்ரோ இந்தத் திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்த கணக்கை இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் ஊடக செய்திகளில் இந்தத் திட்டத்திற்கு 3.78 பில்லியன் ரூபாய் செலவாகியிருப்பதாகக்க் கூறப்படுகிறது.

சூரியனில் உள்ள கரோனா எனப்படும் மேற்புற அடுக்குகளைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் சூரியனில் இருந்து வெளிப்படும் சூரியப் புயல்களை ஆய்வு செய்யவும் ஏழு கருவிகளை ஆர்பிட்டர் எடுத்துச் செல்கிறது.

கரோனா அடுக்கு என்பது சூரியனில் உள்ள ஓர் மேற்புர அடுக்கு. சூரியனை சிறு வயதில் வரையும்போது அதைச் சுற்றி அலை அலையாகக் கோடுகளைத் தீட்டியிருப்போம். அந்த அலைகள் உண்மையாகவே இருக்கின்றன. சூரியனில் உள்ள அதீத வெப்பத்தின் வெளிப்பாடாக உள்ள இவற்றை கொரோனா அடுக்கு எனக் கூறப்படுகிறது.

பூமியிலிருந்து நம்மால் பார்க்க முடிகின்ற சூரியனின் மேற்பரப்பு மற்றும் சூரியனின் அந்த மேற்பரப்பிற்கும் கொரோனா அடுக்குக்கும் இடையே இருக்கும் ப்ளாஸ்மா எனப்படும் மெல்லிய அடுக்கு ஆகியவற்றை அந்தக் கருவிகள் ஆய்வு செய்யும்.

சூரியப் புயல் போன்ற சூரியனின் செயல்பாடுகள் மற்றும் பூமியிலும் அதன் அருகே இருக்கும் விண்வெளிப் பகுதியிலும் உள்ள வானிலையில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள இந்த ஆய்வுகள் உதவும்.

“சூரியனின் கதிர்வீச்சு, வெப்பம், அதிலிருந்து வெளிப்படும் துகள்கள், காந்தப்புலங்களின் ஓட்டம் ஆகியவை பூமியின் வானிலையில் தொடர்ந்து தாக்கம் செலுத்துகின்றன. அதேநேரத்தில் அவை விண்வெளியிலும் தாக்கம் செலுத்துகின்றன,” என்கிறார் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.

“செயற்கைக் கோள்கள் திறம்படச் செயல்படுவதில் விண்வெளியின் வானிலைக்கு முக்கியப் பங்கு உண்டு. சூரியப் புயல், செயற்கைக்கோள்களில் உள்ள மின்னணுவியலை பாதிக்கலாம். மின் கட்டங்களைத் தகர்க்கலாம்,” என்று பிபிசியிடம் கூறினார் மயில்சாமி அண்ணாதுரை.

இந்தியாவுக்குச் சொந்தமான 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. தகவல் தொடர்பு இணைப்புகள், வானிலை பற்றிய தரவுகள், வறட்சி, வரவிருக்கும் பேரிடர்களைக் கணிப்பது என அவை நாட்டிற்குப் பல முக்கியமான சேவைகளை வழங்கி வருகின்றன.

விண்வெளியில் தோராயமாக 10,290 செயற்கைக் கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 7,800 செயல்பாட்டில் உள்ளன.

ஆகவே, சூரியனின் இயக்கவியலை ஆதித்யா-எல்1 மூலம் தெளிவாகப் புரிந்துகொள்வது, நமக்குப் பல வழிகளில் உதவக்கூடும் என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை. அவற்றை ஓரிரு நாட்களுக்கு முன்னமே அறிந்துகொள்ளவும் சூரியப் புயல் போன்றவற்றின் பாதையில் இருந்து செயற்கைக் கோள்களை நகர்த்தவும் இந்த ஆய்வுகள் உதவக்கூடும் என்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.