ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ!!
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக மரணம் விளைவிக்கக்கூடிய குற்றம், ஆதாரங்களை அழிக்க காரணமாக இருந்தது ஆகியவற்றிற்காக, இந்திய தண்டனை சட்டம் 304, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒடிசா ரெயில் விபத்து நடந்த பகுதியில் பணியாற்றிய சீனியர் செக்ஷன் பொறியாளர் அருண் குமார் நொஹந்தா, செக்ஷன் பொறியாளர் முகமது அமீர்கான், டெக்னீஷியன் பப்புகுமார் ஆகிய 3 பேரையும் கடந்த ஜூலை 7-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், இந்தப் பிரிவுகளின் கீழ் போகேஸ்வர் நகரில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விபத்து நடந்த 2 மாதத்திற்குள் சிபிஐ புலன் விசாரணையை நடத்தி முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.