விண்வெளி நிகழ்வுகளை ஆய்வு செய்ய புது விண்கலம் – இஸ்ரோவின் அடுத்த அதிரடி!!!
பூமியின் துணைக் கோளான நிலவின் நிலப்பரப்புத் தன்மையை அறிந்து கொள்வதற்காக சந்திரயான் 1, 2, 3 ஆகிய விண்கலன்களை இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. இதன் வாயிலாக, நிலவில் தண்ணீா் இருப்பதாக ஏற்கனவே கண்டறிந்துள்ள சந்திரயான், தற்போது நிலவின் மேற்பரப்பில் கந்தகம், அலுமினியம், சிலிகான், கால்ஷியம், இரும்பு போன்ற மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதேபோல, செவ்வாய்க் கிரகத்தின் தன்மைகளை அறிந்துகொள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் செலுத்தப்பட்டு, அதுவும் வெற்றிகரமாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, சூரியனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை இந்தியா விண்ணுக்கு செலுத்தியுள்ளது.
இதன் தொடா்ச்சியாக, வானியல் நிகழ்வுகளை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக ‘எக்ஸ்போசாட்’ என்ற கண்காணிப்பு விண்கலனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. எக்ஸ்போசாட் விண்கலத்தில் போலிக்ஸ் (எக்ஸ்ரே ஒளிக்கதிா் வழியாக செயல்படும் முனைவுமானி அல்லது எக்ஸ்ரே போலரிமீட்டா்), எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஒளிக்கதிா் நிறமாலைமானி, காலம் அறிதல்) ஆகிய இரண்டு அறிவியல் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணியில் ஈடுபட இருக்கும் ‘எக்ஸ்போசாட்’ விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.