;
Athirady Tamil News

ஜி20 மாநாடு: இந்தியா தலைமை தாங்குவதால் சீனா சீர்குலைக்க முயற்சியா? ஜின்பிங் வராதது ஏன்?!!

0

டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்திருந்தது.

அதிபருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங் தலைமையிலான குழு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்திருந்தது.

கடந்த மாத இறுதியில் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்னைகள் குறித்தும் பேசியிருந்தனர்.

ஆனால் இந்த சந்திப்பிற்கு பிறகு, சீனா தனது புதிய தேச வரைப்படத்தை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் அருணாசலப் பிரதேசம் மற்றும் அக்ஷய் சின் பகுதிகள் சீனாவுக்கு சொந்தமானவை எனப் பொருள்படும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

சீனாவின் இந்த செயலை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை மீண்டும் பூதாகரமாகி உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்தால், இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அவர் இந்தியா வரவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜி20 மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காததை மையாக வைத்து, பவ்வேறு கருத்துகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஜி 20 மாநாட்டில் ஷி ஜின்பிங் பங்கேற்காததற்கு சீனா கூறும் காரணங்கள் குறித்தும், இதுதொடர்பாக பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்தும் இங்கு காண்போம்.

டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஷி ஜின்பிங், ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு செல்லாத நிலையில், அவர் ஆன்லைன் மூலமாகவும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? என்று ஏஎஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கு ஜி20 மிகவும் முக்கியமான அமைப்பாக திகழ்கிறது. இதன் முக்கியத்துவத்தையும், இதுதொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதன் அவசியத்தையும் சீனா நன்கு உணர்ந்துள்ளது.

இதன் காரணமாகவே, சீன பிரதமர் லி கியாங் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழு இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் பங்கேற்க உள்ளது. சீனாவின் முன்மொழிவுகளை பிரதமர் லி கியாங் மாநாட்டில் முன்வைப்பார்,” என்று மாவோ பதிலளித்தார்.

மேலும், ஜி20 நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை தக்கவைத்து கொள்வதே சீனாவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், ஜி20 மாநாடு வெற்றிபெற பிற நாடுகளுடன் இணைந்து செயலாற்ற சீன தயாராக உள்ளது என்றும், இதனால் உலக பொருளாதாரம் விரைவில் வளர்ச்சி எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காதது குறித்த செய்தியாளரின் இந்த கேள்விக்கு நீண்ட விளக்கம் அளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஜி20 மாநாட்டில் ஷி ஜின்பிங் பங்கேற்காததற்கான காரணம் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.

ஷி ஜின்பிங்கை தவிர, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜி 20 மாநாட்டில் ஷி ஜின்பிங் பங்கேற்காதது, சீனா இந்தியாவை புறக்கணிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

ஜி20 மாநாட்டில் ஷி ஜின்பிங் பங்கேற்காததற்கான காரணத்தை சீன வெளியுறவு அமைச்சகம் வெளிப்படையாக கூறவில்லை.

இந்த நிலையில் சீன அதிபர் இந்தியா வராததற்கான காரணம் குறித்து பிரிட்டன் நாளிதழான ‘கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2020 மற்றும் 2021 இல் கொரோனா காலத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஷி ஜின்பிங் ஆன்லைன் மூலம் பங்கேற்றார். ஆனால் அவர் இம்மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பது இதுவே முதல்முறை.

சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவை புறக்கணிப்பதாகவே பார்க்கப்படுகிறது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரம். அமெரிக்க ஆதிக்க குழுக்களை விட தனது ஆதிக்க குழுவுக்கு சீனா அதிக முக்கியத்துவம் தருவதன் வெளிப்பாடாகவும் ஜி20 மாநாட்டில் ஷி ஜின்பிங் கலந்து கொள்ளாத முடிவு பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சீனாவின் அரசியல் நிபுணரான வென் டி சாங் கூறும்போது, “ பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உடனே ஜி20 மாநாட்டில் ஜின்பிங் கலந்து கொள்ளாதது, ‘கிழக்கு வளர்கிறது; மேற்கு வீழ்ச்சி அடைகிறது’ என்ற சீனாவின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது” என்று வென் டி சாங் கூறியிருந்தார்.

அத்துடன், ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வரும் ஜப்பான் பிரதமரை ஷி ஜின்பிங் சந்திக்க விரும்பாததும் அவர் இம்மாநாட்டை தவிர்ப்பதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜி 20 மாநாட்டின்போது, ஜப்பான் மற்றும் சீன தலைவர்கள் சந்தித்து பேச வாய்ப்புண்டு என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

இந்நிலையில், சீன அதிபர் இந்தியா செல்லவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது என்று சாங் கருத்து தெரிவித்துள்ளதாக கார்டியன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி 20 நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாமல் உள்ள நிலையில், இம்மாநாட்டை தவிர்க்கும் நடவடிக்கையை சீன அதிபர் எடுத்துள்ளார்.

ஜப்பான் பிரதமரை சந்திக்க விரும்பாதது போன்ற காரணத்தை தவிர, சீன அதிபர் இந்தியா வராமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்து, ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜி20 மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மேலை நாடுகளின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியாகியிருக்கும் அந்த செய்தியில், “ஜி20 மாநாட்டின் முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கில் அவர் (ஜின்பிங்) ஆண்டு முழுவதும் உழைத்துள்ளார்.

இந்த பின்னணியில் ஜின்பிங் இந்தியாவுக்கு வராதது ஒன்று புதிய விஷயம் அல்ல” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாமல் உள்ள நிலையில், இம்மாநாட்டை தவிர்க்கும் நடவடிக்கையை சீன அதிபர் எடுத்துள்ளார்.

தனது இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஜி20 நாடுகளின் மேலாதிக்கத்திற்கும் சீனா அடி கொடுத்துள்ளது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னையை கருத்தில் கொண்டு, இந்தியா தலைமைத் தாங்கி நடத்தும் ஜி20 மாநாட்டை சீர்குலைக்க சீனா விரும்புகிறது என்று இந்திய நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் யுக்ரேன் போரின் விளைவாக, சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, கார்னேஜ் சைனா என்ற சிந்தனைக் குழுவின் இயக்குநர் பால் ஹென்லி கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளில் ஜி20 நாடுகள் சீனா மீதான தங்களின் நிலைப்பாட்டை கடுமையாக்கி உள்ளன. எனவே ஜின்பிங்கிற்கு இது கடினமான கூட்டம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலைவருக்கான தனது நம்பகத்தன்மையை அதிகரித்து கொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஜி20 மாநாட்டை பெரிதும் நம்பியிருந்தார்.

சர்வதேச தலைவருக்கான தனது நம்பகத்தன்மையை அதிகரித்து கொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஜி20 மாநாட்டை பெரிதும் நம்பியிருந்தார்.

இத்தகைய சூழலில், ஜின்பிங் மாநாட்டுக்கு வருகை தராதது அவர் பிரதமர் மோதியை புறக்கணிப்பதாகவே பார்க்கப்படும் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும்,சீனாவுக்கும் இடையே கடந்த காலங்களில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், இந்திய பகுதிகளை இணைத்து சீனா அண்மையில் வெளியிட்டுள்ள புதிய வரைப்படம், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

சீனாவின் புதிய வரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது உண்மையில் அரசியல் பின்னணி கொண்டது என்று கூறுகிறார் சிங்கப்பூரின் எஸ்.ராஜரத்தினம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனஸ் ஸ்டடீஸை சேர்ந்த கொலின் கோ.

ஏனெனில், இந்த சீன அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் வரைபடம் வெளியிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், ஜி 20 மாநாட்டில் ஷி ஜின்பிங் இல்லாதது இந்திய பிரதமர் மோதிக்கு அதிர்ச்சியானதாக இல்லை. பல வழிகளில் அது அவருக்கு சாதகமாகவே இருக்கிறது என்றும் கொலின் கோ தெரிவித்துள்ளார்.

“ஜின்பிங் இந்தியாவின் வருகை உறுதி செய்யப்பட்டிருந்தால், எல்லைப் பிரச்னையை தீர்க்க தீவிர முயற்சி எடுக்காமல், இருநாட்டு உறவுகள் சீரடைந்ததாக கருதப்படும்” என்று கொள்கை ஆய்வு மையத்தின் பேராசிரியர் பிரம்மா செல்லனி கூறியுள்ளார்.

இந்திய – சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஜி 20 மாநாட்டுக்கு ஷி ஜின்பிங்கை வரவேற்க பிரதமர் மோதி தீவிரமாக இருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷி ஜின்பிங் இந்தியா வரவில்லை என்பது, ஜி20 மாநாட்டை நடத்தும் இந்தியாவின் பிரதமர் மோதிக்கு அதிர்ச்சிகரமான தகவல் தான் என்று ப்ளூம்பெர்க் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றத்தின் விளைவாக, ஜி20 மாநாட்டில் முதல்முறையாக இந்த முறை ஒருமித்த கருத்து எட்டப்படாமல் போகலாம் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஜி20 நாடுகளின் அனைத்து மாநாடுகளிலும் ஷி ஜின்பிங் பங்கேற்றுள்ளார். இத்தகைய பின்னணியில் தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்கவில்லை.

அவரது இந்த முடிவு, கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே மோதியும், ஷி ஜின்பிங்கும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு நேர்மாறாக இருக்கும் என்றும் ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.

அத்துடன் அமைதியை முன்னெடுத்து செல்லும் தலைவராக ஷி ஜின்பிங் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளவும் விரும்புகிறார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் டெல்லியில் சந்திக்கும் போது, ரஷ்யா -யுக்ரேன் போர் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் எழலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.

டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் வரவில்லை என்ற செய்திக்கு பிரிட்டனின் ஸ்கை நியூஸ் முக்கியத்துவம் அளித்துள்ளது.

ஜி 20 மாநாட்டில் மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் டெல்லியில் சந்திக்கும் போது, ரஷ்யா -யுக்ரேன் போர் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் எழலாம். இதன் காரணமாக உணவுப் பாதுகாப்பு, கடன் நெருக்கடி, பருவநிலை மாற்றம் போன்ற முக்கியமான பிரச்னைகள் குறித்த விவாதங்கள் மீதான கவனம் குறையலாம் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா -யுக்ரேன் போர் காரணமாக, இந்தியா தலைமைத் தாங்கி நடத்தும் ஜி20 கூட்டங்களில் ஒருமதித்த கருத்துடன் கூட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில், டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கூட்டறிக்கை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இந்த மாநாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் எனவும் ஸ்கை நியூஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவை புறக்கணிக்கும் வகையில் ஜின்பிங் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஜின்பிங் இந்தியா செல்லவில்லை என்ற செய்தியையும், இந்தியாவை புறக்கணிக்கும் வகையில் அவர் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஜின்பிங் 2012இல் சீன அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு முறையும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த முறை டெல்லிக்கு செல்லாத அவரது முடிவை நியாயப்படுத்துவது எளிதான விஷயமல்ல என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜின்பிங் இந்தியா வந்திருந்தால், அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்துப் பேசியிருக்கலாம். ஆனால் ஜி20 தொடர்பான சீனாவின் தற்போதைய முடிவு, அமெரிக்காவுடனான பதற்றத்தை தனது சொந்த நிபந்தனைகளின்படி ஜின்பிங் குறைக்க விரும்புகிறார் என்பதை சுட்டிக்காட்டுவதாகவும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் சீனா சவால்களை சந்தித்து வரும் நிலையில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஜின்பிங்கின் பதவிக் காலத்தில் இது மிகவும் கடினமான கட்டம் என்றும் தி நியூயார்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.

இந்தியாவை காயப்படுத்தும் எந்த வாய்ப்பையும் சீனா நழுவ விடுவதில்லை என்ற கருத்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
“இந்தியாவை அதிர்ச்சியடைய வைக்கும் வாய்ப்பை சீனா தவறவிடுவதில்லை”

ஜின்பிங் இந்தியா வரவில்லை என்ற செய்தி, வால் ஸ்ட்ரீட் ஜர்னலிலும் இடம் பெற்றுள்ளது.

கடந் 2012 இல் இருந்து இதற்கு முன்புவரை நடைபெற்ற அனைத்து ஜி 20 மாநாடுகளிலும் ஜின்பிங் பங்கேற்றுள்ளார்.

ஆனால், சீன பிரதமர் லி சியாங் இந்த மாநாட்டில் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.

“இந்தியாவை காயப்படுத்தும் எந்த வாய்ப்பையும் சீனா நழுவ விடுவதில்லை. ஏனெனில் இந்தியா உலக அரங்கில் தனது தலைமைத்துவத்தை அதிகரித்து வருவதாக சீனா உணர்கிறது” என்று OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் டீன் ஸ்ரீராம் சௌலியாவின் கருத்தை மேற்கோள்காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்வான் பள்ளத்தாக்கில் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு, இந்தியா – சீனா இடையே இடைவெளி இருந்து வருகிறது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜின்பிங் இந்தியா செல்லாததற்கு அமெரி்க்காவுடனான பதற்றத்தைவிட, பிராந்திய உறவுளே காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜின்பிங் இந்தியா செல்லாததற்கு அமெரி்க்காவுடனான பதற்றத்தைவிட, பிராந்திய உறவுளே காரணம் என்று நிபுணர்களை மேற்கோள்காட்டி ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின்படி, மேற்கத்திய நாடுகளுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஜி 20 மாநாட்டில் முதன்முறையாக ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.

இதன் விளைவாக, வரும் நவம்பரில் நடைபெறும் APEC கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, ஜின்பிங் சந்திப்பதற்கான வாய்ப்பும் குறைந்துள்ளது எனவும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரென்மின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளின் பேராசிரியர் வாங் யிவே, “ஜின்பிங் இந்தியாவுக்குச் செல்லவில்லை என்பதால், சீனா ஜி20 இல் கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தமல்ல. மாநாட்டில் பங்கேற்க சீன பிரதமரை அனுப்பி வைப்பதும் சரியான முடிவு தான்.

ஏனெனில் ஜி20 என்பது சர்வதேச பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களைப் பற்றி விவாதிக்கும் மன்றம்” என்று வாங் யிவே கூறியுள்ளதால் அந்த செய்தி தெரிவிக்கிறது.

நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகளின் தலைவரான ஜு ஃபெங் கூறும்போது, “ ஜி20 மாநாட்டில் ஜின்பிங் இல்லாதது அமெரிக்கா -சீனா உறவுகளைப் பற்றியது அல்ல; மாறாக இந்தியா – சீனா இடையேயான உறவுகள் பற்றியது. ஜின்பிங் இந்தியா செல்லாமல் இருப்பது சகஜம்” என்று அவரது கருத்தை மேற்கோள்காட்டி அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜி20 மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்காதது, இந்தியாவை அதிர்ச்சியடைய செய்யும் என்றும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியில் எழுதப்பட்டுள்ளது.

முன்னதாக காஷ்மீரில் நடைபெற்ற ஜி20 சுற்றுலா நிகழ்வையும் சீனா புறக்கணித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.