உண்மையான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது !!
அரசியல் நோக்கத்துக்காக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டு பிடிக்கவும் முடியாது எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியும் கிடைக்காது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெற வைப்பதற்காகவே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். குண்டுத்தாக்குதலை பொதுஜன பெரமுன தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது என்றுகூறப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. எனவே நாங்கள் கொள்கை அடிப்படையில் செயற்படுகின்றோமே தவிர சந்தர்ப்பவாத அரசியல் செய்யவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.720 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு 70 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு வெளியே அமெரிக்காவிலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவம் மற்றும் விசாரணைகள் தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அரசியல் நோக்கத்துக்காக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டு பிடிக்கவும் முடியாது.பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியும் கிடைக்காது” என்றார்.