வன்னி மூங்கிலாற்றில் ‘வில்லோடு வா வெண்ணிலா’ கவிதை நூலின் வெளியீடு!! (PHOTOS)
முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு வாழ் பெண் படைப்பாளி வி.அபிவர்ணாவின் ‘வில்லோடு வா வெண்ணிலா’ கவிதை நூலின் வெளியீட்டு விழா கடந்த 30 ஆம் திகதி மூங்கிலாறு கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் நடைபெற்றது . அபிவர்ணா தனது பாடசாலை பருவத்திலேயே இரண்டு நூல்களை வெளியீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வடமராட்சி கிழக்கு மருதம் பண்பாட்டுப் பேரவை தலைவர் கவிஞர் யாழ் மருதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் சி.ஜெயகாந்த் கலந்துகொண்டார்.
இளைய படைப்பாளி பாரதிமைந்தன் வரவேற்புரை வழங்கியதோடு, கிழக்கு மாகாண படைப்பாளிகள் சார்பாக அம்பாறை மண்ணில் இருந்து வருகை தந்த காரையூர் கதன் வாழ்த்துரை வழங்கினார். இதனை தொடர்நது நூலாசிரியர் வி.அபிவர்ணாவின் பெற்றோர் நூலினை வெளியிட்டு வைக்க, முதற் பிரதியினை புதுக்டியிருப்பு பிரதேச செயலர் சி.ஜெயகாந்த் பெற்றுக்கொண்டதோடு ‘நூலாசிரியர் தனது மாணவி என்பதுடன், பாடசாலைக் காலத்திலும் இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டவர் ‘ என்று தெரிவித்தார்.
மேலும் , ‘முற்றத்து மூங்கிலுல முதல் விளைச்சல் நெல்லுமணி சிட்டுக்குருவிக்கென சீதனமாய் கட்டி வைப்போம்’ என்கின்ற வரிகள் மூங்கிலாற்று மக்கள் இயற்கையோடு எவ்விதமாக பின்னிப் பிணைந்து வாழுகின்றார்கள் என்பதற்கு சாட்சி பகர்கின்றது என்றார் ஆய்வுரை நிகழ்த்திய யோ.புரட்சி. அத்தோடு இந் நிகழ்ச்சிகளை வானொலி அறிவிப்பாளர் பிரியங்கன் பாக்கியரத்தினம் தொகுத்து வழங்கியதோடு , நூலாசிரியருக்கு இலக்கிய அமைப்புகள், சமூக மட்ட அமைப்புகளின் கௌரவிப்பு இடம்பெற்றது.
நூலாசிரியர் சார்பில் நாற்பது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. மூங்கில் மரங்களும், ஆறும் சூழ்ந்த காரணப்பெயராக மூங்கிலாறு உள்ளது என்பதோடு, போர்க்காலத்தில் அதிகமான மக்கள் இடம்பெருந்து தரித்திருந்த இடமாகவும் மூங்கிலாறு இருந்தமை குறிப்பிடத்தக்கது.