ஹாலிவுட் ஸ்டைலில் ஏ.டி.எம். கொள்ளை.. திடீரென போலீஸ் என்ட்ரி.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. ஹாலிவுட் திரைப்பட சீரிஸ் fast and furious-இல் வரும் காட்சியை போன்று, ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கட்டி, அதனை கார் கொண்டு இழுத்துச் செல்ல முகமூடி அணிந்த கும்பல் முயற்சித்து இருக்கிறது. இந்த கொள்ளை சம்பவம் முழுக்க முழுக்க அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோவை வைத்துக் கொண்டு போலீசார் கயவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் செப்டம்பர் 6-ம் தேதி அகிகாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.
அப்போது முகமூடி அணிந்த நிலையில், இருவர் ஏ.டி.எம். மையத்தை அடைந்தனர். வழக்கமாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், இவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர். இவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு உபகரணங்கள் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுக்க, காவலர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்தனர். எனினும், காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.