தேயிலைத் தோட்ட விவசாயிகளின் பசுந்தேயிலை விலையை உயர்த்தி வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி அறிக்கை!!
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பசுந்தேயிலைக்கு யதார்த்தமான குறைந்தபட்ச ஆதார விலையை, அதாவது 1 கிலோ பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 33.50-ஐ நிர்ணயம் செய்திட, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாக்குபெட்டா படுகர் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 1.9.2023 முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, தற்போது பசுந்தேயிலையின் விலை மிகவும் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தின் பிரதிநிதிகளை தி.மு.க. அரசு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, உடனடித் தீர்வாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ. 10 மானியமாக வழங்கிட வேண்டும் என்றும்; மேலும், அவர்களது கோரிக்கையான பசுந்தேயிலை ஒரு கிலோவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 33.50-ஐ பெற்றுத்தர மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.