மாலத்தீவில் அதிபர் தேர்தலில் இழுபறி: யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை!!
மாலத்தீவில் அதிபர் தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் 2-வது முறையாக போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது முயிஸ் உள்பட 8 பேர் வேட்பாளர்களாக தேர்தலில் களம் இறங்கினர். நேற்று நடந்த வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், அதில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டன. அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகள் பெற வேண்டும். இதில் அதிபர் இப்ராகிம் முகமது சோலிக், முகமது முயிஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் மாலத்தீவு அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
8 வேட்பாளர்களில் யாரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று முழுமையான வெற்றியை பெறவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளரான முகமது முயிஸ் 46 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் 39 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் தேர்தலில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2-வது சுற்று தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல் 2 இடங்களை பிடித்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டிருந்தது.
மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 2-வது சுற்று தேர்தல் உறுதி செய்யப்பட்டால் அது இம்மாத இறுதியில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மாலத்தீவில், இந்தியாவும், சீனாவும் செல்வாக்கை செலுத்த முயற்சித்து வருகின்றன. இதில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டில் அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் உள்ளார். அவர் 2-வது முறை அதிபராக வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார். முகமது முயிஸ், சீனாவின் ஆதரவாளராக கருதப்படுகிறார். தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மாலத்தீவில் உள்ள இந்திய படைகளை அகற்றி நாட்டின் வர்த்தக உறவுகளை சம நிலைப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.