மகாத்மா காந்தி நினைவிடத்தில் வெறும் கால்களுடன் நடந்து சென்ற உலக தலைவர்கள்!!
ஜி20 கூட்டமைப்பின் 18-வது தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்ததால், கடந்த ஒரு வருடமாக அதன் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல சந்திப்புகள் இந்தியாவெங்கும் நடைபெற்றது. இறுதியாக, நேற்றும் இன்றும் (செப்டம்பர் 9, 10) இந்திய தலைநகர் புது டெல்லியில், பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் எனும் சர்வதேச மாநாட்டு மையத்தில் ஜி20 அமைப்பின் 2-நாள் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது.
இதில் இங்கிலாந்து பிரதமரும், அமெரிக்க அதிபரும் பங்கேற்ற போதும் உறுப்பினர் நாடுகளில் சீனா, ரஷியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் தலைவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை ஆண்டு வந்த வெள்ளையர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்று திரட்டி அகிம்சை வழியில் பல வருடங்கள் போராட்டம் நடத்தி 1947ல் இந்தியா சுதந்திரம் பெற காரணமாக இருந்த முன்னணி சுதந்திர போராட்ட தலைவர் மகாத்மா காந்தி. போர், ரத்தம் சிந்துதல் மற்றும் வன்முறை ஆகியவற்றை வெறுத்து அகிம்சை வழியிலேயே தனது போராட்டங்களை முன்னெடுத்தவர் காந்தி. காந்தி நினைவிடம் மத்திய புது டெல்லி ராஜ் காட் பகுதியில் உள்ளது. ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாவது மற்றும் இறுதி நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களை இங்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பை ஏற்று அங்கு தலைவர்கள் வருகை தந்தனர். அவர்களை மோடி வரவேற்றார். ராஜ் காட் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்திருந்தாலும் உலக தலைவர்களை மோடி வரவேற்கும் போது மழைபொழிவு நின்றிருந்தது. உலக தலைவர்கள் அங்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கு சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்திய பின் அவர்கள் புறப்பட்ட போது பாரம்பரிய இந்திய இசை முழங்கியது. இந்த நிகழ்வின் போது ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ், பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் மற்றும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் காலணிகள் ஏதும் அணியாமல் வெறும் கால்களுடன் அங்கிருந்த ஈர தரையில் நடந்து சென்றனர்.
ரஷிய உக்ரைன் போர் குறித்த வார்த்தைகளை தவிர்த்து அனைத்து உலக தலைவர்களும் ஒப்புதல் அளிக்கும் விதமாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டதும், பருவகால மாற்றங்களின் விளைவுகள் குறித்து ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தியதும் மற்றும் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக்க நடவடிக்கை எடுத்ததும் இந்திய ஜி20 தலைமையின் முக்கிய வெற்றியாக இருந்தாலும், உலக தலைவர்களை ஒருங்கிணைத்து அமைதி வழியில் சிக்கல்களுக்கு தீர்வு காண வலியுறுத்திய காந்தி நினைவிடத்திற்கு அவர்களை அழைத்த மோடியின் ராஜதந்திரம் அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது.