9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? – சதி பின்னணிகள்!!
அமெரிக்காவில் செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதல் நடந்து 19 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் சதி பின்னணிகள் இன்னும் மறந்து போய்விடவில்லை என்கிறார் மைக் ருடின்.
இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு எண்ணற்ற அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் ஒரு அனுமானத்தில், ஒரு ஆவணத்தின் மீது சந்தேகம் எழுந்தால், “பதில் அளிக்கப்படாத மற்றொரு கேள்விக்கு” கவனம் மாறிவிடுகிறது.
9/11 தாக்குதலின் பின்னணி பற்றி இணையத்தில் சுழற்சியில் உள்ள மிகவும் பிரபலமான ஐந்து அறிக்கைகள் இங்கே தரப் பட்டுள்ளன.
கடத்தப்பட்ட விமானங்களை இடைமறிக்கத் தவறியது
கேள்வி: கடத்தப்பட்ட நான்கு விமானங்களில் ஒன்றைக்கூட, உலகின் வல்லமைமிக்க விமானப் படையால் ஏன் இடைமறிக்க முடியாமல் போனது?
சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: விமானங்களை இடைமறிக்க வேண்டாம் என்றும் கீழேயே இருக்குமாறும் அப்போதைய அமெரிக்கத் துணை அதிபர் டிக் செனே ராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகைள் ஆரம்பமாகின.
அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: இது மிகவும் அசாதாரணமான, உள்ளே வன்முறையாளர்கள் உள்ள நிலையில் நடந்த பல விமானங்களின் கடத்தல், விமானத்தைக் கண்டுபிடிக்கும் டிரான்ஸ்பான்டர்கள் ஆப் செய்யப் பட்டிருந்தன அல்லது மாற்றப் பட்டிருந்தன.
இன்னும் சொல்லப் போனால், அன்றைக்கு அமெரிக்க விமானப் படைத் தளத்தில், வழக்கமான ராணுவப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விமானக் கட்டுப்பாட்டு அதிகாரி காலின் ஸ்காக்கின்ஸ் தொடர்ந்து ராணுவத்துடன் தொடர்பிலிருந்தார். பதில் கிடைப்பதில் குறைபாடு எதையும் அவர் உணரவில்லை. பயணிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு (FAA) மற்றும் ராணுவ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு இடையில் தகவல் தொடர்பில் குறைபாடு மற்றும் குழப்பம் இருந்தது.
ராணுவத்தின் கருவிகளும் பழைய காலத்தைச் சேர்ந்தவையாகிவிட்டன, மறைமுகப் போர் அச்சுறுத்தலைக் கையாள்வதற்காகக் கடல் பரப்பின் மீது கண்காணிக்கும் வகையில் தான் அவை வடிவமைக்கப் பட்டிருந்தன.
கேள்வி: இரட்டைக் கோபுரங்களில் சில தளங்களில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் தீ எரிந்த பிறகு, அதன் காலடியிலேயே எப்படிச் சரிந்தது?
சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: கட்டுப்படுத்தப்பட்ட இடித்தல் செயல்பாடுகள் மூலம் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்டுள்ளன. அதிவிரைவாக நடந்த இடிப்புகளின் கோட்பாடுகளின்படி, ஒப்பீட்டளவில் மிகக் குறுகிய அவகாசம் எரிந்த தீ விபத்து சம்பவங்களில் (உலக வர்த்தக மையம் 2-ல் 56 நிமிடங்கள், உலக வர்த்தக மையம் 1-ல் 102 நிமிடங்கள்), இடிந்து விழுவதற்கு முன்னதாக குண்டுவெடிப்பு சப்தங்கள் கேட்டதாகவும், வன்முறைக்கான சில வெளிப்பாடுகளைப் பல தளங்களின் ஜன்னல்களில் இடிபாடுகளுக்குக் கீழே காண முடிந்தது என்றும் கூறுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் விரிவாக ஆய்வு நடத்தியதில், அந்த விமானங்கள் கட்டடத்தை இடித்து, ஆதாரமான தூண்களைச் சேதப்படுத்தி விட்டன என்றும் தீ தடுப்பு வசதிகளைத் துண்டித்துவிட்டன என்றும் கண்டறியப் பட்டுள்ளது.
சுமார் 10,000 கேளன்கள் அளவுக்கு விமான எரிபொருள் பல தளங்களில் தெரித்து விழுந்ததால், பரவலாக தீ பிடித்தது. 1,000 டிகிரி சென்டிகிரேடு வரையிலான வெப்பம் காரணமாகத் தளங்கள் அசைந்து கொடுத்தன, தூண்கள் வளைந்துவிட்டன, அதனால் “வெடி சப்தம்” ஏற்பட்டிருக்கிறது.
தளங்களின் பளு கீழே இறங்கியதால், தூண்கள் வடிவமைக்கப்பட்ட திறனைக் காட்டிலும் அதிகமான எடையளவுக்கு நகரும் விசை தாக்கியுள்ளது. தளங்கள் இடிந்த போது இடிபாடுகள் ஜன்னல் வழியாக வீசி எறியப்பட்டுள்ளன.
கட்டுப்படுத்தப்பட்ட இடித்தல் நிகழ்வுகளின் போது கீழ்த் தளத்திலிருந்து மேல் நோக்கி இடிபடும். இங்கு மேலே இருந்து இடியத் தொடங்கியுள்ளது.
மனிதர்களைக் கொண்டு தேடுதல் பணி மேற்கொண்டபோதிலும், வெடிபொருள்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுவர்கள் அல்லது தூண்களில் முன்கூட்டியே வெட்டுப் பள்ளங்கள் ஏதும் ஏற்படுத்தியதற்கான தடயங்களும் இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட இடித்தலில் இவ்வாறு வெட்டுப் பள்ளம் ஏற்படுத்துவது வழக்கம்.
கேள்வி: தொழில்முறையில் இல்லாத ஒரு பைலட், வர்த்தக ரீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விமானத்தைச் சிக்கலான வளைவுகளாக இயக்கி, உலகின் வல்லமை மிக்க ராணுவத்தின் தலைமையகத்தின் மீது எப்படி மோதச் செய்திருக்க முடியும்? கடத்தப்பட்டதாக முதலாவது தகவல் வெளியாகி 78 நிமிடங்களில், தடயங்கள் ஏதும் இல்லாமல் இதை எப்படிச் செய்திருக்க முடியும்?
சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: கட்டடத்தின் மீது வர்த்தக சேவையிலிருந்த போயிங் 77 விமானம் மோதவில்லை. மாறாக, ஒரு சிறிய ஏவுகணை, ஒரு சிறிய விமானம் அல்லது ஆளில்லா விமானம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் விமானம் 77 தான் கட்டடத்தின் மீது மோதியது என்பதற்கான ஆதாரம் அழுத்தமாக உணரப்பட்டதால், அணுகுவதற்குக் கஷ்டமாக இருந்த வளைவு நெளிவான விமானப் பாதை பற்றிய கேள்விகளுக்குக் கவனம் திசை திருப்பப் பட்டது. அது அல்-கொய்த அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இல்லை, பென்டகனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்ற வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.
அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: சம்பவம் நடந்த இடத்திலிருந்து விமானத்தின் சிதறிய பாகங்களும், கருப்புப் பெட்டிகளும் மீட்கப் பட்டுள்ளன. அவை எப்.பி.ஐ. வசம் வைக்கப் பட்டுள்ளன.
ஆரம்பத்தில் வெளியான விடியோக்களில், சிதறிய பாகங்கள் அதிகம் காணப்படவில்லை என்றாலும், பின்னர் கிடைத்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் விமானத்தின் பாகங்களும், விமானம் சென்ற பாதையும், உடைந்த விளக்குக் கம்பங்களும் தெரிய வந்துள்ளன.
விமான அலுவலர்கள் மற்றும் பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, நல்லமுறையில் டி.என்.ஏ. பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பென்டகனை விமானம் தாக்கியதைப் பார்த்த சாட்சிகளும் உள்ளனர்.
கேள்வி: தாக்குதல் நடந்தபெனிசில்வேனியா ஷான்ஸ்விலே இடம் அவ்வளவு சிறியதாக இருந்ததும், விமானத்தின் சிதறிய பாகங்கள் தென்படாமல் போனதும் ஏன்?
சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: யுனைடெட் ஏர்லைன் விமானம் 93 ஏவுகணையால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதனுடைய சிதறிய பாகங்கள் பெருமளவு பரப்பளவில் சிதறி விழுந்தன.
அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: விமானத்தின் சிதறிய பாகங்களின் தெளிவான புகைப்படங்களும், விமானி அறையின் ஒலிப்பதிவுக் கருவியும் கிடைத்துள்ளன. விமானத்தில் பயணிகள் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும், அதனால் கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தினார்கள் என்பதும் அவற்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
20 நிமிடங்களுக்குப் பிறகு சடலங்கள் ஏதும் வராததால், பிரேதப் பரிசோதனையைத் தாம் நிறுத்திவிட்டதாக, உள்ளூர் பிரேத பரிசோதனையாளர் வால்லி மில்லர் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அடிப்படையில் மற்றொரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அது விமான விபத்து என்று சீக்கிரம் தாம் தெரிந்து கொண்டதாகவும், பலியான பலருக்குப் பெரிய அளவில் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டியிருக்கும் என்று நினைத்ததாகவும் கூட அவர் கூறியிருந்தார்.
மேலும், வர்த்தக ரீதியிலான சேவையில் ஈடுபட்டிருந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்துமாறு விமானப் படைக்கு ராணுவம் ஒருபோதும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
கேள்வி: இரும்பு பிரேம்களைக் கொண்ட விண்ணை முட்டும் வேறு எந்தக் கட்டடமும் தீயின் காரணமாக இடிந்து விழாத போது, விமானத்தால் தாக்கப்படாத, விண்ணை முட்டும் அளவுக்கிருந்த கட்டடம் அவ்வளவு விரைவாக, சமச்சீராக எப்படி இடிந்திருக்கும்?
சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: உலக வர்த்தக மையம் கட்டடம் 7 கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிமருந்துகள் மற்றும் தீயிடுதல் மூலமாக இடிக்கப் பட்டுள்ளது.
ஆரம்பத்தில் “இழுத்து விடுங்கள்” என்று அதன் உரிமையாளர் லார்ரி சில்வர்ஸ்டெயின் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியதன் மீது கவனம் இருந்தது. ஆனால், உண்மையில், தீயணைப்பு வீரர்களை வெளியே கொண்டு வருவது பற்றித் தான் அவர் அப்படிக் கூறியிருக்கிறார். (வெடிபொருள்களை வெடிக்கச் செய்வதற்கு, கட்டட இடிப்பு நிபுணர்கள் “இழுத்து விடுங்கள்” என்ற வார்த்தைகளை வழக்கமாகப் பயன்படுத்துவது இல்லை.
இப்போது அது இடிந்து விழுந்த வேகத்தின் மீது கவனம் செலுத்தப் படுகிறது. 2.25 விநாடிகளில், தடை ஏதுவுமின்றி மிக இயல்பாகக் கட்டடம் இடிந்து விழுந்துவிட்டது. வெடிபொருள்களால் மட்டும் தான் இவ்வளவு வேகமான, சமச்சீரான முறையில் இடித்துச் சரிய வைக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப் படுகிறது.
அதிகாரப்பூர்வ தகவல் பற்றி சந்தேகம் கொண்டிருக்கும் சில விஞ்ஞானிகள், சம்பவ இடத்திலிருந்து நான்கு புழுதி மாதிரிகளைப் பரிசோதனை செய்து பார்த்தனர். சூடாகும் போது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தெர்மைட் பொருட்கள் அங்கே இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். டன் கணக்கிலான தெர்மைட் பொருட்களும், வழக்கமான வெடிபொருள்களும் உலக வர்த்தக மையம் கட்டடம் 7-ன் உள்ளே மட்டுமின்றி, இரட்டைக் கோபுரத்தின் உள்ளும் துளையிட்டு வைக்கப் பட்டுள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர்.
அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த பிறகு, கட்டுப்படுத்த முடியாத தீயினால் கட்டடம் இடிந்து விழுந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளது. அருகில் உள்ள வடக்கு கோபுரம் இடியத் தொடங்கியதும் இது தொடங்கியது. அந்தக் கட்டடத்தில் ஏழு மணி நேரம் தீ எரிந்தது.
அவசர நேரத்தில் தண்ணீர் தெளிக்கும் முறைமைக்குத் தண்ணீர் கொண்டு வரும் இணைப்புகள் துண்டிக்கப் பட்டுவிட்டன. வெடிபொருள்கள் இருந்ததற்கான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட இடித்தல் பணி நடக்கும்போது கேட்பதைப் போன்ற தொடர்ச்சியான மிகவும் பலமான சப்தம் எதுவும் பதிவாகவில்லை. மேலும், “தெர்மைட் பொருட்கள்” குறித்த சந்தேகத்துக்கு வேறு காரணமும் உள்ளது. அது பிரமர் சாயத்தின் ஒரு வகை தான். உலக வர்த்தக மையத்தில் 1,200,000 டன்கள் அளவுக்குக் கட்டுமானப் பொருட்கள் நொறுங்கிக் கிடந்தன. அவற்றில் (பெருமளவு என்று இல்லாவிட்டாலும்) பெரும்பாலான மினரல்கள் இருந்தன. புழுதிகளை மிக விரிவாக ஆய்வு செய்து பார்த்ததில், தெர்மைட் வெடிபொருட்கள் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் கிடையாது என்று அமெரிக்கப் புவியியல் சர்வே அமைப்பு அறிக்கையிலும் மற்றும் ஆர்.ஜே. லீ அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.