ஜி-20 மாநாடு வெற்றி: இந்தியாவுக்கு அமெரிக்கா-சீனா பாராட்டு!!
ஜி-20 உச்சி மாநாடு, டெல்லியில் கடந்த 9, 10-ந்தேதிகளில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். ரஷிய அதிபர் புதின், சீனா அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவில்லை. ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த ஜி-20 உச்சி மாநாடு வெற்றிக்கு இந்தியாவை அமெரிக்கா, சீனா பாராட்டி உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, ஜி-20 ஒரு பெரிய அமைப்பு. பல்வேறு கருத்துக்களை கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர். டெல்லியில் நடந்த உச்சி மாநாடு ஒரு வெற்றி என்று நாங்கள் முற்றிலும் நம்புகிறோம். இதில் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ ஜிங் கூறும்போது, ஜி-20 மாநாட்டு பிரகடனத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டது நேர்மறை தகவல்களை அனுப்புகிறது. வளரும் நாடுகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒருமித்த முடிவுகளை அடைய வேண்டும் என்பதிலும் சீனா எப்போதும் ஆதரவை அளித்தே வருகிறது. ஜி-20 தலைவர்களின் பிரகடனம், ஆலோசனை மூலம் எட்டப்பட்ட ஒருமித்த முடிவாகும். டெல்லி உச்சி மாநாடு, ஜி-20 சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்காக முதன்மை மன்றமாக இருக்கிறது. இந்த உச்சி மாநாடு புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை தீர்ப்பதற்கான இடமில்லை. உக்ரைன் போர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.