;
Athirady Tamil News

இந்திய பிரதமர் மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டத்தை புகழ்ந்த புதின்!!

0

இந்திய தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், திறனை மேம்படுத்தவும், அறிவுசார் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், அதனை கொண்டு இந்தியாவிலேயே அனைத்து பொருட்களும் தயாரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2014-ல் கொண்டு வரப்பட்டது “மேக் இன் இந்தியா” திட்டம். இந்நிலையில் கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8-வது அமர்வில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ஒரு காலத்தில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே கார்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால், பிறகு நாங்கள் உள்நாட்டில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கினோம்.

நாங்கள் 90-களில் இறக்குமதி செய்து குவித்து வந்த அயல்நாட்டு மெர்சிடிஸ் மற்றும் ஆடி கார்களை போல் இவை மிக பிரமாண்டமானவை அல்ல என்றாலும் அது ஒரு குறை அல்ல. எங்கள் கூட்டாளிகளின் வழிமுறைகளை நாங்களும் கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் “மேக் இன் இந்தியா” (இந்தியாவிலேயே தயாரியுங்கள்) திட்டம் போன்றவற்றை நாங்களும் கையாள விரும்புகிறேன். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமும் அந்தந்த நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.

இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றி பெறும் வழிமுறைகளை ரஷியா இந்தியாவை போல கையாள வேண்டும். இந்தியர்கள் இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மிக சரியான வழிமுறை. மோடி மிக சரியானதைத்தான் செய்கிறார். இவ்வாறு புதின் தெரிவித்தார். கடந்த 9, 10 தேதிகளில் இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை உலக நாடுகள் பாராட்டி வரும் பின்னணியில் ரஷிய அதிபரின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.