நிபா வைரசுக்கு பலியானவர்களுடன் தொடர்பில் இருந்த 168 பேர் கண்காணிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!!
கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதன் முதலாக நிபா வைரஸ் பரவியது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் அதிகமாக காணப்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் வரை பலியானார்கள். அதன் பிறகு 2021-ம் ஆண்டும் நிபா வைரஸ் பரவி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் தற்போது நிபா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. கோழிக்கோடு மாவட்டம் மருதோன்கரை மற்றும் அயன்சேரி பகுதியைச் சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதித்து உயிர் இழந்தனர்.
ஒரு நபர் தனியார் மருத்துவமனையிலும், மற்றொருவர் அரசு ஆஸ்பத்திரியிலும் அடுத்தடுத்து இறந்தனர். மேலும் அவர்களது குடும்பத்தினரும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் காய்ச்சல் பாதித்து இறந்தவர்களுக்கு நிபா வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. அதன் அடிப்படையில் இறந்த 2 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் காய்ச்சலால் இறந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் பாதித்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது. சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான 2 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட முதல் நபரின் குடும்பத்தினர், உறவினர்கள், பக்கத்து வீட்டினர் என தொடர்பில் இருந்தவர்கள் 158 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 31 பேர் மட்டுமே குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆவர். மீதமுள்ள 127 பேரும் பலியானவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் ஆவர். அதேபோல் பாதிக்கப்பட்ட 2-ம் நபரின் தொடர்பு பட்டியலில் 100 பேர் உள்ளனர். அவர்களில் 10 பேர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பலியான 2 பேரின் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 168 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிபா வைரசுக்கு பலியானவர்களில் ஒருவரான மருதோன்கரையைச் சேர்ந்தவரின் மனைவி, 2 குழந்தைகள், மைத்துனர் மற்றும் 10 மாத கைக்குழந்தை ஆகிய 5 பேரின் மாதிரி சோதனைக்காக புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 3 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு, தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நிபா வைரஸ் தொற்று பாதித்து இறந்தவர்கள் வசித்த பகுதி மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் இருக்கும் இடங்கள் முழுமையாக சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் அயஞ்சேரி, மருதோன் கரை, திருவள்ளூர், குட்டியாடி, காயக்குடி, வில்லியம் பள்ளி, கவிழும்பாறை ஆகிய 7 ஊராட்சிகளில் 47 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளுக்கு வேறு நபர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அந்த பகுதிகளில் மருந்து கடைகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு செயல்படும் வங்கிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கக்கூடிய மக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்கவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோழிக்கோடு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து கருவிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.