லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோருக்கு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்!!
லிபியா நாட்டை டேனியல் சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. மத்திய தரை கடலில் உருவான அந்த புயல், லிபியாவின் கிழக்கு பகுதியை பந்தாடியது. புயல் காரணமாக கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பின. டெர்னா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உள்பட இரண்டு அணைகள் உடைந்தன. இதனால் டெர்னா நகரங்களுக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது. இதில் வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இதற்கிடையே, லிபியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது. மேலும், 10 ஆயிரம் பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லிபியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது அனுதாபங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் லிபியா மக்களுக்கு துணை நின்று எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.