தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது.. கர்நாடக முதல்வர் திட்டவட்டம்!!!
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவில்லை.
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது, “மாநிலத்தில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் துவங்கும் முன்பு, இந்த விவகாரம் தொடர்பாக எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திட்டமிட்டு வருகிறோம்,” என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூட்டி இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பி.எஸ். எடியூரப்பா, பசுவராஜ் பொம்மை, ஹெச்.டி. குமாரசுவாமி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.
முன்னாள் முதலமைச்சர்களான பசுவராஜ் பொம்மை மற்றும் குமாரசுவாமி ஆகியோர் மற்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதால், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள காவிரி பகுதி அமைச்சர்கள், அனைத்து கட்சிகளை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்து இருந்தார்.