நிபா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு: கோழிக்கோட்டில் பள்ளி-கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்து இறந்தனர். மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபர் கடந்த மாதம் 30-ந்தேதியும், அயன்சேரி பகுதியை சேர்ந்த நபர் கடந்த 13-ந்தேதியும் இறந்தனர். அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர்கள் இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. மேலும் முதலில் பலியான நபரின் குடும்பத்தினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து அந்த நபரின் மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனர் உள்ளிட்டோரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவர்களில் அந்த நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து, அவர்களது தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை மாநில சுகாதரத்துறையினர் சேகரித்தனர். குடும்பத்தினர், உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சை அளித்தவர்கள் என 168 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அயன்சேரி, மருதோன்கரை, திருவள்ளூர், குட்டியாடி, காயக்குடி, வில்லியம்பள்ளி, கவிழும்பாறை ஆகிய 7 ஊராட்சிகளில் 47 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் மருத்து, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர மற்ற கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நிபா தொற்று பாதித்து இறந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களாக பட்டியலிடப்பட்டவர்களில் சிலரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர் ஒருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஏற்கனவே 4 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதார பணியாளரும் பாதிக்கப்பட்டு உள்ளதால் கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ள முதலில் பலியான நபரின் மகன், மைத்துனர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 789 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 157 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு யாருக்கும் இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக கோழிக்கோடு பகுதியில் உள்ள ஏராளமான மருத்துவ மனைகளில் போதுமான அளவு அறைகள் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடையணிந்து பணியாற்றுகிறார்கள். தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 13 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் உடல்நிலை டாக்டர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. நிபா வைரஸ் பாதிப்புக்கு முதலில் இறந்த நபரின் மகன் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கோழிக்கோடு மாவட்டத்தில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட மருதோன்கரை மற்றும் அயன்சேரி ஊராட்சிகளில் உள்ள 313 வீடுகளில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவம் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. மேலும் அனைத்து பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் 10 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான ஆய்வு கூட்டம் முடிந்தபிறகு, சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் மற்றும் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் இதனை தெரிவித்தனர். கோழிக்கோடு நகரில் மக்கள் கூட்டமாக கூடுவதை வருகிற 24-ந்தேதி வரை தவிர்க்க உத்தரவு பிறப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபகால நிகழ்வுகளுக்கு முன்னதாக திட்டமிடப்பட்ட கோவில் திருவிழாக்கள், தேவாலய விருந்துகள் உள்ளிட்ட சமய நிகழ்வுகளை குறைந்தபட்ச மக்கள் பங்கேற்புடன் நடத்த வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.