‘இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும்’ – இணையத்தில் புலம்பும் பாகிஸ்தான் நெட்டிசன்கள்!!
இந்த ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் மாநாட்டுக்கு தலைமையேற்ற இந்தியா, அதை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு இந்திய சுற்றுலா அமைச்சகம் கடந்த மே மாதம் ஏற்பாடு செய்திருந்தது.
காஷ்மீரில் நடைபெற்ற இந்தக் கூட்டம், பாகிஸ்தான் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அப்போது பேசுபொருளானது. அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரும் இதுதொடர்பாகப் பேசியிருந்தார். காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆளுகைக்குக் கீழ் வரும் முசாபராபாத் சட்டமன்றத்தில் இதுகுறித்து அவர் பேசினார்.
அப்போது, “ஜி20 நாடுகளின் மாநாட்டை தலைமையேற்று நடத்த கிடைத்துள்ள வாய்ப்பை இந்தியா தவறாகப் பயன்படுத்தி வருகிறது,” என்று சர்தார் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட ஜி20 மாநாட்டு நிகழ்வுகளை செய்திகளாக வெளியிட பாகிஸ்தான் ஊடகங்கள் ஆர்வம் காட்டவில்லை.
அமைச்சரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான மும்தாஜ் ஜஹ்ரா பலோச்சும் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதன் மூலம் உலக அரங்கில் தம்மை முக்கிய நாடாக காட்டிக் கொள்ள இந்தியா விரும்புகிறது. ஆனால், சர்வதேச மனித உரிமைகளுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும். ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும்,” என்று பலோச் வலியுறுத்தி இருந்தார்.
இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான அவரது குரல், பாகிஸ்தானின் பிற பிரதிநிதிகளின் குரலைப் போல ஆக்ரோஷமாக இல்லை என்று கருதப்பட்டது.
ஜி20க்கு முக்கியத்துவம் அளிக்காத பாகிஸ்தான் ஊடகங்கள்
இத்தகைய சூழலில், ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற்றது.
உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட இந்த மாநாட்டு நிகழ்வுகளை செய்திகளாக வெளியிட பாகிஸ்தான் ஊடகங்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
பாகிஸ்தானில் இருந்து வெளியாகி வரும் முன்னணி ஆங்கில மற்றும் உருது நாளிதழ்களில் ஜி20 மாநாடு குறித்த செய்திகள் முதல் பக்கத்தில் இடம் பெறவில்லை.
அதேநேரம், இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி குறித்த செய்தி பாகிஸ்தான் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருந்தது.
இந்த ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் மாநாட்டுக்கு தலைமையேற்ற இந்தியா, அதை வெற்றிகரமாக நடத்தியும் முடித்துள்ளது.
பிரபல உருது இதழான ‘நவா- இ-வக்த்’ ஜி20 மாநாடு தொடர்பான செய்திகளை கடைசி பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
இருப்பினும், அந்த இதழில் வெளியாகியிருந்த கட்டுரையில், இந்த மாநாடு தொடர்பான விவகாரங்களைவிட, காஷ்மீரில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
டெய்லி டான், எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன், தி நேஷன் போன்ற பிற பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள், ஜி20 மாநாடு தொடர்பாக சர்வதேச செய்தி முகமைகளில் இடம்பெற்றிருந்த தகவல்களை மட்டும் தங்களது இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தன.
அதேநேரம், இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்காதது, பிரதமர் நரேந்திர மோதியின் இருக்கைக்கு முன் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகை போன்றவை தொடர்பான செய்திகளுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் முன்னுரிமை அளித்திருந்தன.
இதேபோன்று மாநாட்டையொட்டி, டெல்லியின் குடிசைப் பகுதிகள் துணிகளால் மூடி மறைக்கப்பட்டதாக வெளியான எதிர்மறை செய்திகளுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவத்துவம் கொடுத்திருந்தன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒப்பிட்டு அந்நாட்டவர் சிலர் தங்களின் சமூக ஊடக பக்கங்களில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டு நிகழ்வுகளை பாகிஸ்தான் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. ஆனாலும், பாகிஸ்தானின் சமூக ஊடகங்களில் இந்த மாநாடு பேசுபொருளாக மாறியது. இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒப்பிட்டு அந்நாட்டவர் சிலர் தங்களின் சமூக ஊடக பக்கங்களில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
அவற்றில், சர்வதேச அளவில் தங்களது நாட்டின் நிலை குறித்து பாகிஸ்தானை சேர்ந்த இணையவாசிகள் சிலர் ஏமாற்றமும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மாநாடுகளை இந்தியா ஒன்றன்பின் ஒன்றாக நடத்தி வருகிறது. ஆனால், உண்மையில் பாகிஸ்தானில் இதுவரை இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதா என்று சமூக ஊடகங்களில் பாகிஸ்தானியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சர்வதேச அளவிலான இதுபோன்ற விஷயங்களில் பாகிஸ்தானின் நிலை என்ன, இதில் தங்களது நாடு எங்குள்ளது எனவும் சிலர் ஆதங்கத்துடன் ட்விட்டரில் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வரலாற்று பின்புலத்தை மேற்கோள்காட்டியும் இணையவாசிகள் சிலர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அத்துடன் தங்கள் நாட்டின் தற்போதைய அவலநிலைக்கு பாகிஸ்தான் ராணுவம்தான் காரணம் எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள இரண்டு முறை முயன்றார். இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தவும் அவர் முயற்சிகளை முன்னெடுத்தார்.
அதன்மூலம், பிராந்திய மற்றும் உலக வர்த்தகத்தின் மையமாக பாகிஸ்தானை மாற்ற நவாஸ் ஷெரீஃப் விரும்பினார்.
ஆனால், அவரது இந்த முயற்சிகளைச் செயல்படுத்தவிடாமல் பாகிஸ்தான் ராணுவம் தடுத்தது என்று தங்களது சமூக ஊடக பதிவுகளில் பாகிஸ்தானை சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
“கடந்த 2014-15இல் இம்ரான் கான் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர், ‘மோதியின் நண்பர் துரோகி’ என்று நவாஸ் ஷெரீஃப்பை மறைமுகமாக விமர்சித்திருந்தார். ஆனால், இந்தியர்கள் மிக வேகமாக முன்னேறி வருகின்றனர்” என்று பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் ஆய்வாளரான ஓமர் அசார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
“ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்துவதன் மூலம், உலக அளவில் வளரும் நாடுகளின் பிரதிநிதியாக இந்தியாவை உலக அரங்கில் முன்னிலைப்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி விரும்பினார்,” என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராகப் பணியாற்றிய ஹூசைன் ஹக்கான் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா திகழ்கிறது. தனது நாட்டு மக்களின் நலன் சார்ந்த விஷயங்களை உலக அரங்கில் முன்னிலைப்படுத்த இந்தியா முயல்கிறது,” என்றும் ஹக்கான் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் மிக வேகமாக முன்னேறி வருகின்றனர் என்று பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் ஆய்வாளரான ஓமர் அசார் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் தமது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தட திட்டத்தின் முன்மொழிவையும் ஹூசைன் ஹக்கான் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக பாகிஸ்தான் ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ள ஹக்கான், தமது கொள்கைகளை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானியர்கள் தங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வெறும் பேச்சு, முழக்கம், உறுதிமொழி மட்டும் நாட்டின் முன்னேற்றத்துக்கு போதாது என்றும் தமது சமூக ஊடக பதிவுகளில் ஹூசைன் ஹக்கான் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரியான ஹூசைன் ஹக்கானின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் விதத்தில், பாகிஸ்தான் பங்குச் சந்தையின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு நபர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
“பொருளாதார முன்னேற்றத்துக்கு பாகிஸ்தான் தமக்கு முன்னுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாகிஸ்தானில் இருந்து இரானுக்கு தற்போது நேரடியாக பயணம் மேற்கொள்ள முடியும். இதேபோன்று இங்கிருந்து ஓமனுக்கும் கடல் வழியாகப் பயணம் செய்ய இயலும். குவாதர் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன,” என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜி20 மாநாட்டு நிகழ்வுகளில் கவனம் செலுத்தும் மனநிலையில் பாகிஸ்தான் மக்கள் இல்லை என்கிறார் அரசியல் ஆய்வாளரான இம்தியாஸ் குல்.
பொருளாதார பிரச்னைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதம் முக்கிய பிரச்னையாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், நாட்டு மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது என தான் நம்புவதாகவும் இம்தியாஸ் குல் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவை அழிப்போம்; இந்தியாவை நசுக்குவோம்” என்ற முழக்கங்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள் என்று கூறுகிறார் குல்.
“இதுபோன்ற முழக்கங்களின் மூலம் இந்தியாவை அவமானப்படுத்த முயன்றோம். ஆனால் இன்று உலக அரங்கில் இந்தியா எந்த நிலையில் உள்ளது, பாகிஸ்தான் எங்கு உள்ளது என்று பாருங்கள்,” என்கிறார் இம்தியாஸ் குல்.
“நாட்டின் வளர்ச்சியைக் காண விரும்பும் பாகிஸ்தானியர்களும், இந்த வளர்ச்சிக்காகத் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்புவோரும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்தியுள்ளதால் இந்தப் பாதிப்பு ஏற்படவில்லை.
நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் இன்னும் நீண்டகால திட்டங்களில் கவனம் செலுத்தவில்லை. தொலைநோக்கு பார்வையின்மையால் பாகிஸ்தான் இன்று இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது,” என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அரசியல் ஆய்வாளரான இம்தியாஸ் குல்.
இஸ்லாமாபாத்தில் உள்ள குவாய்ட் -இ-ஆஸாம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்துப் படித்து வருபவர்கள் ரஃபியுல்லா மற்றும் முகமது ஹூசைன்.
இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்கின்றனர் அவர்கள்.
ஆசியாவின் தலைசிறந்த நாடாக உருவாக, 1990களில் பாகிஸ்தான் கனவு கண்டது. ஆனால் அதன் பின்னர் அதன் பயணம் மற்றும் பாதை மாறிவிட்டது என்று பிபிசியிடம் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியா நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்திமிக்க நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் அவர்கள் கூறினர்.