சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி !!
எதிர்காலத்தில் உள்ள சவால்களை வெற்றிகொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் நிலையான பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் உள்ளுர் அதிகாரிகளை ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை (14) சந்தித்து நீட்டிக்கப்பட்ட கடன் வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அனைத்து பலதரப்பு நிறுவனங்கள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதலாவது மீளாய்வு வெற்றிகரமாக முடிவடைந்தமை இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை மேம்படுத்தும் என்றார்.
இரண்டாவது தவணையைப் பாதுகாப்பதற்கும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் இந்த மீளாய்வு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்றும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூலம் பொருளாதார மீட்சிக்கான வலுவான நிலையில் இலங்கை அமைவதோடு, 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சிக்கான நம்பிக்கைக்குரிய பாதையை அமைக்கிறது என்றார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.