65 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு !!
2023 ஜனவரி முதல் செப்டம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வறட்சி, கடும் மழை மற்றும் பீடைகள் காரணமாக 65 ஆயிரத்து 871.32 ஏக்கர் நெல் மற்றும் ஏனைய பயிர்களும் 67 ஆயிரத்து 122 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பதிவாகிய பயிர் சேதங்கள் தொடர்பாக கமநல காப்புறுதி சபை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்துள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் அதிகளவாக 26 ஆயிரத்து 813.67 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதுடன் 32 ஆயிரத்து 245 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக உடவளவ வலயத்திலும் மூன்றாவதாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மாத்தளை, புத்தளம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களிலும் அதிகளவிலான பயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன.
கமநல காப்புறுதி சபை இறுதி பயிர் சேத மதிப்பீட்டு அறிக்கையை வழங்கியவுடன் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பயிர் சேதங்கக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.