உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது !!
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்றும் இலங்கை தனது மறுசீரமைப்பு முயற்சிகள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தவும் முதலீடுகளை கவர்வதற்கும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட எதிர்பார்க்கிறது என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
‘அண்மைய உயர் நிலை சுற்றுப்பயணங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தின் நோக்கு’ என்ற தலைப்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சிக்கான, வலுவான மறுசீரமைப்பு மற்றும் மறுமலர்ச்சி நிகழ்ச்சி நிரல்களுடன் இலங்கையை இந்து சமுத்திர வலலயத்திற்கு உயர்வான இடத்திற்கு கொண்டுச் செல்ல அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சாகல ரத்நாயக்க,
ஒரு நாடு என்ற வகையில் நிலைத்தன்மை, நம்பகத்தன்மையையுடனான விம்பத்தை தக்கவைத்துக் கொள்வதன் ஊடாக உலகில் இலங்கையின் அபிமானத்தை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சிகளின் போது, டிஜிட்டல் நிதியியல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்.
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் தனித்துவமான மைல்கல் இலக்கு என மேற்படி முற்சிகளை குறிப்பிடலாம் என்று தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஆரம்ப கட்டங்களில், இலங்கை சர்வதேச பங்குதார்களிடத்தில் உத்தரவாதத்தை கோரியிருந்தது. பெரிஸ் சமவாயத்துடன் இணைந்து இந்தியாவும் சீனாவும் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன. பிரதான பங்குதாரர்களின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய சீன விஜயம் இலங்கைக்கு மிகவும் சாத்தியமாக அமைந்திருந்தாகவும், விரைவில் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீன-இலங்கை உறவுகளைப் பொறுத்தவரை, சீனாவின் குறிப்பிடத்தக்க இரண்டு முதலீடுளில் ஒன்றான துறைமுக நகரத் திட்டத்திற்கு அவசியமான புதிய நீதி கட்டமைப்பை தயாரிப்பதற்கான ஆசோலனைகள் சவால்களுக்கு மத்தியிலும் கோரப்பட்டுள்ளது என்றும் இந்த சட்ட ரீதியான செயற்பாடுகள் எதிர்கால முதலீடுகளை கவரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் வான், கடல், நிலம், பொருட்கள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மின் இணைப்புகளின் மேம்பாடு உட்பட பல்வேறு வழிகளில் தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டது.
ஆசிய வலயத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இலங்கையின் அமைவிட ரீதியான முக்கியத்துவம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜதந்திரிகள் மற்றும் கல்வியியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.