தேசியவாத காங்கிரஸ் கட்சி, சின்னம் யாருக்கு? அக்டோபர் 6-ந்தேதி ஆஜராக இருதரப்பினருக்கும் உத்தரவு!!
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவார். அரசியல் களத்தில் முக்கியமான நேரத்தில் அதிரடி முடிவு எடுக்கக் கூடியவர். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். அப்படி இருந்தபோதிலும், மகாராஷ்டிராவில் அவரது அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றனர்.
நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று சரத் பவார் தெரிவித்து வருகிறார். அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என்று அஜித் பவார் தெரிவித்து வருகிறார். இதற்கிடையே இருதரப்பிலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றிற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வருகிற 6-ந்தேதி (அக்டோபர்) இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்றைய தினம் இருதரப்பிலும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் சரத் பவார் பிரிவுக்கும், அஜித் பவார் பிரிவுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு தரப்பிலும் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும். இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில் “எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன் எடுத்து வைப்போம்” என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.