யஷோபூமி, புது ரெயில் நிலையம் திறப்பு; விஸ்வகர்மா திட்ட தொடக்கம்: மோடியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்!!
2023 ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கலை மற்றும் கைவினை கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் “விஸ்வகர்மா திட்டம்” எனும் புதிய திட்டம் குறித்து தனது உரையில் குறிப்பிட்டார்.
இன்று அவரது 73-வது பிறந்த நாளையொட்டி பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதையொட்டி நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். முதலில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணித்து சென்று யஷோபூமி துவாரகா செக்டார் 25 ரெயில் நிலையம் எனும் செக்டார் 21 மெட்ரோ ரெயில் நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடத்தை திறந்து வைத்தார். அதற்கு பிறகு, டெல்லியின் துவாரகா பகுதியில் அமைக்கப்பட்ட “யஷோபூமி” என பெயரிடப்பட்டிருக்கும் உலகிலேயே மிக பெரிய சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தையும் (IICC) திறந்து வைத்தார். மொத்தம் 8.9 லட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மையம் 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு விஸ்வகர்மா திட்டத்திற்கான இலச்சினையையும், சின்னத்தையும், இணைய முகப்பையும் டேக்லைனுடன் துவங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது மோடி குறிப்பிட்டதாவது: வரும் காலங்களில் புதிய தொழில்நுட்பங்கள் உபகரணங்கள் குறித்து உங்களுக்கு பயிற்சி தேவை. அதனை அரசு உங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கும். இப்பயிற்சியின் போது ரூ.500 வழங்கப்படுவதுடன் உபகரணங்களுக்கான தொகையாக ரூ.1500 உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் பொருட்களை பெயரிடுவதிலும், சந்தைப்படுத்துவதிலும் அரசு உங்களுக்கு உதவும். நீங்கள் உங்கள் உபகரணங்களை ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி இதில் சேரும் கலைஞர்களுக்கு அடையாள அட்டை, திறன் மேம்பாட்டு உதவி, உபகரண ஊக்கத்தொகையாக ரூ.15,000, பிணையில்லா கடனாக முதற் பகுதியாக ரூ.1 லட்சமும் பின்னர் ரூ.2 லட்சம் ஆகியவற்றுடன் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட உதவியும் வழங்கப்படும். இத்திட்டத்தில் 18 வகையான கலை மற்றும் கைவினை தொழில்கள் இடம்பெறும்.