இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த கனடா: ஜி20 மாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு என்ன நடந்தது?!!
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார். மற்ற உலகத் தலைவர்களைப் போலவே அவரும் ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் டெல்லியில் இருந்து செவ்வாய்க் கிழமை மதியம்தான் புறப்பட முடிந்தது.
ட்ரூடோவின் இந்தப் பயணம் ‘சிரமங்கள்’ நிறைந்தது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் இந்தியாவில் அவர் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. மறுபுறம் கனடாவிலும் அவர் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அவரது சுற்றுப்பயணம் ‘ஒரு தோல்வி’ என்றும் ‘வெட்கக்கேடானது’ என்றும் கனடாவின் ஊடகங்கள் கூறுகின்றன.
பிரதமரான பிறகு 2018 இல் அவர் மேற்கொண்ட ‘தோல்விகரமான’ இந்திய சுற்றுப்பயணத்தையும் கனடாவின் ஊடகங்கள் நினைவுபடுத்தின. அப்போது அவர் ‘குற்றம் நிரூபணமான பயங்கரவாதியை’ தன்னுடன் இரவு விருந்துக்கு அழைத்திருந்தார்.
ஜி20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் பைடன், ட்ரூடோவின் முகத்தை நோக்கி விரலைக் காட்டுவது போன்ற ஒரு படம் பற்றியும் கனடாவில் விவாதிக்கப்படுகிறது.
இந்தப்படத்தில், ட்ரூடோவோ, அமெரிக்க அதிபரோ மகிழ்ச்சியாக காணப்படவில்லை. மேலும் பைடன், ட்ரூடோவுக்கு ‘பாடம் கற்பிப்பது’ போல் அதில் காணப்படுகிறார்.
அதிகாரபூர்வ வாழ்த்து பறிமாற்றத்தின் போது பிரதமர் நரேந்திர மோதி ட்ரூடோவை சந்தித்தபோது, கைகுலுக்கியவாறே ட்ரூடோ தனது கைகளை விடுவித்துக்கொள்வதுபோல காணப்பட்டது. இந்த படம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் தொடர்ந்து நிலவிவரும் ‘பதற்றத்தை’ பிரதிபலிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ட்ரூடோவிடம் கேட்டபோது சிரித்துக்கொண்டே இந்தக்கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்க்க முயன்றார். ஆனால் விஷயம் ‘இது மட்டும் இல்லை’ என்று கனடிய ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது.
இந்தியா தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகவும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் உள்ளது.
சுமார் நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட கனடாவின் பொருளாதாரமும் உலகின் முதல் பத்து பொருளாதாரங்களில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை ஒப்பிடும்போது கனடாவின் பரப்பளவு இந்தியாவை விட 204 சதவிகிம் பெரியதாக இருந்தாலும், கனடாவின் மக்கள் தொகை இந்தியாவை விட மிகக் குறைவு.
இந்தியாவுடனான கனடாவின் வளர்ந்து வரும் தூதாண்மை இடைவெளி குறித்தும் கனேடிய ஊடகங்களில் கவலை தெரிவிக்கப்படுகிறது.
“இந்தோ-பஸிஃபிக் பிராந்தியத்திற்கான புதிய உத்தியை நாம் அறிவித்திருந்தாலும், பிராந்தியத்தின் இரண்டு பெரிய பொருளாதாரங்களான இந்தியா மற்றும் சீனாவிலிருந்து நாம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்,”என்று டொராண்டோ சன் குறிப்பிட்டுள்ளது.
ஏராளமான இந்திய சீக்கியர்களும் கனடாவில் வாழ்கின்றனர். கனடாவின் உள்நாட்டு அரசியலில் சீக்கிய மக்கள் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளனர். உள்நாட்டு அரசியலின் காரணமாக ட்ரூடோ இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறார் என்று நம்பப்படுகிறது.
“இந்தியாவின் பொருளாதாரம் நம்மை விட இரண்டு மடங்கு பெரியது. அவர்களின் மக்கள் தொகை 140 கோடி. நம்மைக்காட்டிலும் இது மிக அதிகம். எனவே கனடாவுக்குத்தான் இந்தியாவின் தேவை அதிகமாக உள்ளது,” என்று டொராண்டோ சன் தனது கட்டுரையில் கூறியுள்ளது.
இரு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திலும் பெரிய வித்தியாசம் உள்ளது. கனடாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.5 சதவிகிதமாக உள்ளது. அது 1.4 சதவிகிதமாக குறையவும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.9 சதவிகிதமாக உள்ளது. மேலும் அது அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் வெளியாகியுள்ளது.
‘தொழில்நுட்ப கோளாறு‘ காரணமாக ட்ரூடோ டெல்லியில் தங்க வேண்டி வந்தது அவருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. திங்கள்கிழமையன்று டெல்லி லலித் ஹோட்டலில் தான் தங்கியிருந்த அறையை விட்டு அவர் வெளியே வரவே இல்லை என்பதிலிருந்தே அதை தெரிந்து கொள்ள முடிகிறது.
ட்ரூடோவுடனான தனது சந்திப்பின் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, “இந்தியா-கனடா உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விரிவாகப் பேசினோம்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்திருந்த ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்தியா மிகுந்த நட்பு பாவத்துடன் நடந்து கொள்ளாதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
ட்ரூடோவின் ஆட்சியின் போது கனடா, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை எந்த விளக்கமும் அளிக்காமல் திடீரென நிறுத்தி அதிர்ச்சி தந்தது.
ட்ரூடோ ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ட்ரூடோ கருத்தியல் ரீதியாக நரேந்திர மோதிக்கு எதிரானவர் என்று கனடிய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
“துரதிர்ஷ்டவசமாக மோதியின் உள்நாட்டுக் கொள்கைகள் தனது சொந்த அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என்று ட்ரூடோ கருதுகிறார். அவர் மோதியிடமிருந்து தூரத்தை பராமரிப்பது மட்டுமல்லாமல் அவருக்கு தனது அதிருப்தியை தெரிவிக்கவும் விரும்புகிறார்,” என்று டொராண்டோ சன் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததற்காக பிரதமர் ட்ரூடோ தனது சொந்த நாட்டிலேயே கண்டனங்களுக்கு உள்ளானார். கனடாவின் சாஸ்காசேவான் மாகாணத்தின் தலைவர் ஸ்காட் மோயே, இந்தியாவுடனான உறவை ட்ரூடோ கெடுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து ட்ரூடோ மாகாணங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
ட்ரூடோ உள்நாட்டு அரசியல் காரணங்களால் இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரித்து வருவதாக திங்களன்று வெளியிட்ட கடிதத்தில் ஸ்காட் மோயே கூறியுள்ளார்.
சாஸ்காசேவான் மாகாணம் தனது ஏற்றுமதியின் நாற்பது சதவிகிதத்தை இந்தியாவுக்கு அனுப்புகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் இங்குள்ள பொருளாதாரத்தை பாதித்துள்ளது.
டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின் போது மோதிக்கும் ட்ரூடோவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, வான்கூவரின் சர்ரேயில் ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ என்ற பிரிவினைவாத அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தியாவிற்கு வெளியே உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான சீக்கிய மக்கள் கனடாவில்தான் வாழ்கின்றனர். விவசாயிகள் இயக்கம் மீதான கடுமையான நிலைப்பாடு உட்பட, மோதி அரசின் பல கொள்கைகள் சீக்கியர்களுக்கு எதிரானவை என்று கனடாவில் கருதப்படுகிறது.
விவசாயிகள் போராட்டத்தின் போது அதை வெளிப்படையாக ஆதரித்த ட்ரூடோ, கருத்து சுதந்திரம் பற்றியும் பேசினார்.
ஜி20 மாநாட்டின் போது இந்தியா, ‘காலிஸ்தான் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று கனடாவிடம் கேட்டுக் கொண்டதும் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
ட்ரூடோவுடனான சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோதி, கனடாவில் நடந்து வரும் பிரிவினைவாத ‘காலிஸ்தானி இயக்கம்’ குறித்து பேசியதோடு கூடவே அது தொடர்பான இந்தியாவின் கவலைகளையும் தெரிவித்தார்.
ட்ரூடோவுக்கும் மோதிக்கும் இடையிலான சுருக்கமான சந்திப்பு நிகழ்ந்த அதே நாளில் கனடாவின் வான்கூவரில் உள்ள சீக்கிய சமூகம், இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரிப்பது தொடர்பான கருத்து வாக்கெடுப்பை நடத்தியது.
ஜி-20 மாநாட்டின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை அவசியம் என்று ஜஸ்டின் ட்ரூடோவிடம் நரேந்திர மோதி கூறியதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜி-20 மாநாட்டின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை அவசியம் என்று ஜஸ்டின் ட்ரூடோவிடம் நரேந்திர மோதி கூறியதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீக்கிய இயக்கம் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய தூதர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘கனடாவில் வாழும் இந்திய சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு’ எதிராக இந்தியாவுடன் இணைந்து போராட வேண்டும் என இந்தியா கனடாவிடம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இதுகுறித்து ட்ரூடோவிடம் கேட்கப்பட்டபோது,” கனடா எப்போதுமே கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்கும். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதே நேரத்தில், வன்முறையை நிறுத்தவும், வெறுப்பைக் குறைக்கவும் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்,” என்று பதில் அளித்தார்.
”ஒருசிலரின் நடவடிக்கைகள் முழு கனடிய சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று ட்ரூடோ கூறினார்.