;
Athirady Tamil News

”2 ஆம் கட்ட நிதியைப் பெறுவது சிரமம்” !!!

0

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளில் 30 சதவீதம் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

எஞ்சிய 70 சதவீத நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளது. எனவே இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வெளிநாட்டுக் கடன்களை தொடர்ந்தும் மீள செலுத்த முடியாது என்ற நிலைபாட்டிலேயே அரசாங்கம் காணப்பட்டால் , சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாது. கடனை மீளப் பெறுதல் மாத்திரமின்றி, சர்வதேசத்தின் மத்தியிலும் அங்கீகாரத்தைப் பெற முடியாத நிலைமை ஏற்படும்.

இதுவரையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் 30 சதவீதம் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளது. 70 சதவீதமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. இவற்றுக்கு மத்தியில் நாட்டிலிருந்து மூளைசாலிகள் வெளியேறுகின்றமையானது சகல துறைகளிலும் பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது.

இதற்கு சிறந்த உதாரணம் ஸ்ரீலங்கன் எயா லைன்ஸ் சேவையிலிருந்து 60 விமானிகள் விலகியுள்ளனர். விமானிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட மூளைசாலிகளின் வெளியேற்றத்தினைத் தடுப்பதற்கு அரசாங்கம் ஏன் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை? தற்போது முழு நாட்டினதும் பொருளாதாரம் பாரிய சரிவினை எதிர்கொண்டுள்ளது.

இவை ஒரு புறமிருக்க மறுபுறம் குற்றச்செயல்களும் பாரியளவில் அதிகரித்துச் செல்கின்றன. தற்போது நாட்டில் மாதமொன்றுக்கு சுமார் 30 கொலைகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் மாத்திரமின்றி கடந்த வருடத்தில் 3406 பேர் தற்கொலை செய்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் தரவு திணைக்களத்தின் ஆய்வொன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் பொருளாதார நெருக்கடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செனல் 4 காணொளி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பினரின் கருத்துக்கும், பாதுகாப்பு அமைச்சின் கருத்துக்கும் இடையில் பரஸ்பரம் காணப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சு இதனை முற்றாக நிராகரித்துள்ள போதிலும், ஜனாதிபதியின் தரப்பினர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதற்கு முன்னர் 3 வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களையும் , செனல் 4 வெளியிட்டுள்ள விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டு சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளிப்படுத்தப்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.