ஸ்டாம்ப் ஒட்டி தபால் மூலம் அனுப்பப்பட்ட குழந்தைகள்: எங்கு, எப்போது?!!
அப்போது, அமெரிக்க தபால் மூலம் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் அனுப்ப முடியும். 1913 ஆம் ஆண்டில், உள்ளூர் பார்சல் வசதி கிடைத்த பிறகு கிராமப்புறங்களுக்கும் வசதி கிடைத்தது.
நகரங்களுக்கு இடையே அதிகம் பணம் செலவழித்து பயணம் செய்வதற்கு பதிலாக வெண்ணெய், முட்டை, கோழிகள், குஞ்சுகள் மற்றும் குழந்தைகளை கூட பார்சலில் அனுப்ப தொடங்கினர்.
ஆம். நீங்கள் படித்தது சரிதான். இது அமெரிக்க தபால் சேவையின் மீதான நம்பிக்கையால் மட்டுமல்ல, செலவு குறைவு என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பார்சலில் அனுப்பினார்கள்.
உண்மையில், சில பெற்றோருக்கு ரயில் பயணம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. எனவே மிகக் குறைந்த விலையில் வழங்கப்படும் இந்தச் சேவைகளை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று யோசித்தனர்.
ஜோய் சில்வியா என்ற ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்ப விரும்பினர். தபால்காரர் வெர்னான் குழந்தையை அவள் பாட்டி வீட்டுக்கு பத்திரமாக கொண்டு சென்று சேர்த்தார். இதற்கு அந்த குடும்பம் வெறும் 15 சென்ட் மட்டுமே செலவு செய்தது. $50 காப்பீட்டு பாதுகாப்பும் அவர்களுக்கு கிடைத்தது.
இந்த சம்பவத்தை நியூயார்க் டைம்ஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது. தபால்காரர் வெர்னான் வரும்போது குழந்தை தயாராக இருந்தது என்றும் அஞ்சலட்டையில் இருந்த விலாசத்தில் குழந்தையை அவர் பத்திரமாக ஒப்படைத்தார் என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரை வெளியான பிறகு, அமெரிக்க போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஃபிராங்க் ஹிட்ச்காக்கிற்கு குழந்தையை தத்தெடுக்க விரும்பும் ஒருவரிடம் இருந்து கோரிக்கை வந்தது.
“பார்சல் செய்வதற்கான விதிமுறைகள் என்ன என்பதை நீங்கள் எங்களிடம் கூறினால், அதற்கேற்ப தயார் செய்வோம். ஏனெனில் விரைவு அஞ்சல் சேவைகள் சில நேரங்களில் மோசமான சேவைகளை வழங்குகின்றன,” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலளித்து அமெரிக்க தபால் அதிகாரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தேனீக்கள், பூச்சிகள் தவிர பிற உயிரினங்களை தபால் மூலம் அனுப்பும் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தபால் மூலம் குழந்தைகளை அனுப்புவது அதிகாரப்பூர்வமானது அல்ல என்று தெரிந்தாலும், பலரும் தங்கள் குழந்தைகளை பார்சலில் அனுப்ப கோரிக்கை வைத்தனர்.
ஓக்லஹோமா பெண் ஒருவர் தனது இரண்டு வயது பேரனை கன்சாஸின் வெலிங்டனில் உள்ள சிறுவனின் அத்தைக்கு பார்சலில் அனுப்பினார்.
“சிறுவனை தபாலில் அனுப்பும்போது அவனது கழுத்தில் ஒரு பட்டை இருந்தது. குழந்தையை சுமக்க சில சென்ட்கள் கொடுக்கப்பட்டன. அங்கிருந்து கிராமப்புற சாலையில் 40 கி.மீ தூரம் பயணித்து ரயில் நிலையத்தை அடைந்தனர். சிறுவன் தபால்காரருடன் பயணம் செய்து அவருடன் உணவருந்தினான். அவன் பத்திரமாக கொண்டு சென்று சேர்க்கப்பட்டான்,” என நியூயார்க் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு சுவையான சம்பவம் ஜூன் 1914 இல் நடந்தது. ஒரு பெண் தனது இரண்டு வயது மகனை லா போர்ட்டில் வசிக்கும் தனது கணவர் ஹென்றி ஆய்லருக்கு தபாலில் அனுப்பினார். ஆனால், தனது மகனை மருமகள் விவாகரத்து செய்துவிட்டாள், இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறி ஆய்லரின் தாய் குழந்தையை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதனால், குழந்தை லபோர்ட் கவுண்டி தபால் நிலையத்தில் சிக்கிக்கொண்டது. “தனது தாயிடமே தற்போது குழந்தை அனுப்பப்பட வேண்டும். ஆனால், அதற்குள் ஆய்லர் வந்து குழந்தையை பெற்றுக்கொண்டார். இந்த பயணத்தை அக்குழந்தை நன்றாக ரசித்தது” என்று ஸ்டார் குறிப்பிடுகிறார்.
சார்லோட் மே பீர்ட்சாஃப் சம்பவமும் மறக்கமுடியாது ஒன்றாகும். பிப்ரவரி 19, 1914 அன்று, சார்லோட்டின் பெற்றோர் அவளை 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாத்தா பாட்டி வீட்டுக்கு ரயிலில் தபாலில் அனுப்பினர்.
“பழைய ஐடாஹோ மலைகளில் பல மைல்களுக்கு அப்பால் வாழும் தனது பாட்டி மேரியை சந்திக்க வேண்டும் என்று சார்லோட் ஆவலுடன் இருந்தார்” என்று அலெக்ஸாண்ட்ரா டேஞ்சர் குறிப்பிடுகிறார். ஆனால், அவளின் கனவை நனவாக்குவதற்கு அவளது குடும்பத்தினரிடம் பண வசதி இல்லை. எனவே, அவளை ஐடாஹோவில் உள்ள கிரேஞ்சேவாலுக்கு அனுப்ப புதிய தந்திரத்தைக் கண்டுபிடித்தனர்.
அவரது கோட்டில் 53 சென்ட் மதிப்புள்ள ஸ்டாம்ப்கள் ஒட்டப்பட்டன. சார்லோட்டின் தாயின் சகோதரி ரயில்வே அஞ்சல் சேவையில் பணிபுரிந்தார். அவள் கேட்டுக்கொண்டதையடுத்து அஞ்சல் சேவை மூலம் சிறுமியை அங்கு அனுப்ப ஊழியர்கள் ஒப்புக்கொண்டனர்.
சார்லோட்டின் சாகசம் மிகவும் பிரபலமானது. மைக்கேல் ஓ’டன்னல் இந்த பயணம் தொடர்பாக ‘மீலிங் மே’ என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்க போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பர்ல்சன், அஞ்சல் சேவை மூலம் மனிதர்களை அனுப்புவதற்கு தடை விதித்தார்.
இருப்பினும், அந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களுக்குள், மேரிலாந்தில் உள்ள கிளியர் ஸ்பிரிங்கில் உள்ள பெண் ஒருவர் தனது வீட்டிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு பிஎச் நிப்பர் என்ற தபால்காரர் மூலம் சுமார் 7 கிலோ எடையுள்ள குழந்தையை அனுப்பி வைத்தார்.
பிப்ரவரி 25, 1915 இல், முசோரியில் இருந்து சார்லஸ் ஹேய்ஸ் என்ற தபால்காரர், ஹெலன் என்ற பெண்ணை அவரது பாட்டியின் வீட்டிற்கு கொண்டு சேர்த்தார். இதற்கு 10 சென்ட்கள் வசூலிக்கப்பட்டது.
அந்த காலத்தில் குழந்தைகளை ரயிலில் அனுப்புவது மிகவும் செலவு மிகுந்ததாக இருந்தது. ஒருசில பெற்றோர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை இதற்காக செலவிட வேண்டியிருந்தது. மேலும் குழந்தைகளை தபாலில் அனுப்புவதற்கு தபால் ஊழியர்கள் மீதான நம்பிக்கையும் காரணமாக இருந்தது என்று அலெக்ஸாண்ட்ரா டேஞ்சர் நம்புகிறார்.
தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தைகளை கவனிக்க யாரும் இல்லாத நிலையில், அவர்களை தாத்தா, பாட்டியிடம் அனுப்ப அப்போது இருந்தவர்கள் தபால் சேவையை நம்பியதாக ஜோர்டான் காஸ்பூர் தெரிவித்தார்.
தேசிய அஞ்சல் அருங்காட்சியக வரலாற்றாசிரியர் நான்சி போப்பை நினைவு கூர்ந்து பேசிய காஸ்பூன் , “அப்போது ரயில் டிக்கெட்டை விட அஞ்சல் சேவையின் விலை குறைவாக இருந்தது. மற்ற பார்சல்களைப் போல குழந்தைகளை கேன்வாஸ் பைகளில் கொண்டு செல்லவில்லை. மேலும், அவர்களை தபால்காரர் கண்காணித்தார். பெற்றோர் தபால்காரர் இடையே ஒரு நம்பிக்கை இருந்தது. தபால்காரரை தங்கள் வீட்டில் ஒருவராக அவர்கள் நினைத்தார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
“நீங்கள் போகிற வழியில் எங்க குழந்தையை விட்டுட்டு போய்விடுங்கள் என்று தபால்கார்களிடம் கேட்பது போன்ற சூழல் அப்போது இருந்தது” என்று சில்வியா கூறுகிறார்.
மார்ச் 27, 1915ல் புளோரிடாவின் பென்சகோலாவைச் சேர்ந்த எட்னா நெஃப் என்பவர் தனது ஆறு வயதில், வர்ஜீனியாவின் கிறிஸ்டியன்ஸ்பர்க்கில் இருந்து சுமார் 1100 கிமீ தொலைவில் வசிக்கும் அவரது தந்தைக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டார். அவரது பயணம் குறித்து அதிகம் தெரியவில்லை. ஆனால், அப்போது அவரது எடை 22 கிலோ, 14 சென்ட் மதிப்புள்ள ஸ்டேம்ப் அவள் மீது ஒட்டப்பட்டது.
ஒரு குழந்தை பார்சல் தபால் மூலம் பயணித்த மிக நீண்ட தூரம் இது என்று அலெக்ஸாண்ட்ரா டேஞ்சர் கூறுகிறார்.