பார்த்து கவனமா இருங்க.. கனடா வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை!!
கனடாவில் வாழும் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. “இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாலும், கனடாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் கனடா செல்ல திட்டமிட்டு இருக்கும் பயணிகளும் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்தியா மற்றும் கனடா இடையேயான விரிசல் அதிகரித்து வந்ததே இதற்கு காரணம் ஆகும்.
அதன்படி, இந்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளில் ஒன்றாக காலிஸ்தான் புலிப்படை அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதியாத அறிவித்தது. எனினும், இவர் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். கனடாவில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதனிடையே கடந்த ஜூன் 18-ம் தேதி இவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கனடா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இம்மாத துவக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட கனடாநாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த விவகாரம் இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கனடா நாட்டு வர்த்தகத் துறை மந்திரி இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் கனடா குடியுரிமை பெற்ற ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற கனடா நாட்டிற்கான வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் உள்ள கனடா நாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரி ஐந்து நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கான அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியாவில் வாழும் கனடா நாட்டு மக்கள் கவனமாக இருக்க அந்நாட்டு மக்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.