சந்திரபாபு நாயுடு ஜாமீனில் வெளியே வந்தாலும் கைது செய்ய நடவடிக்கை!!
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நேற்று லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, தீர்ப்பை தள்ளி வைத்தது. இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது அமராவதி தலைநகர் வளர்ச்சி திட்டம், புறவழிச்சாலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாக, சந்திரபாபு நாயுடு மீதும், அப்போதைய அமைச்சர் நாராயணா உட்பட மேலும் சிலர் மீதும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இதுகுறித்தும், சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க வேண்டுமெனவும், இந்த வழக்கில் இவர் தான் முதல் குற்றவாளி எனவும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பிடிவாரண்ட் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஆந்திராவில் பைபர் நெட் ஒப்பந்தத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் முறைகேடு நடந்ததாக மற்றொரு வழக்கையும் சி.ஐ.டி போலீசார் பதிவு செய்துள்ளனர். இதிலும் பிடிவாரண்ட் மனுவை சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நேற்று சிஐடி போலீசார் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை சந்திரபாபு நாயுடு மீது மட்டும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒன்றில் ஜாமீன் கிடைத்தாலும், மற்றொரு வழக்கில் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என கருதப்படுகிறது. ஆந்திராவில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய எதிர்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு மீது தற்போது பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளிவர முடியாதபடி ஜெகன்மோகன் அரசு கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
வழக்குக்கு மேல் வழக்கு போட்டு அவரை தேர்தல் முடியும் வரை ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் நெருக்கடி கொடுத்து மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என ஆளும் கட்சியினர் திட்டம் வகுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷையும் விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.