;
Athirady Tamil News

42 ஆண்டுகளாக மூடி கிடக்கும் “பேய் ரெயில் நிலையம்”!!

0

பேய் பங்களா, பேய் வீடு என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு ரெயில் நிலையம் பேய் பீதியில் 42 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி பிரிவில் உள்ள கோட்ஷிலா-முரி பிரிவில் இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் பெயரைக் கேட்டவுடன் மக்கள் அச்சம் அடைவதாகவும், இந்த அச்சத்தின் காரணமாக எந்த ஒரு ரெயில்வே ஊழியரும் இந்த ரெயில் நிலையத்தில் பணியாற்றத் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. இன்றும் இந்த ரெயில் நிலையம் வழியாக ரெயில்கள் செல்லும்போது, ரெயிலுக்குள் அமைதி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெயில் நிலையத்திற்கு மாலையில் யாரும் வருவதில்லை. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் கூட இங்கு காணப்படுவதில்லை என்று கூறுகின்றனர். இந்த நிலையத்தின் பெயர் பெகுன்கோடர். இது 1960களில் ஒரு பரபரப்பான நிலையமாக இருந்தது. இந்த ரெயில் நிலையம் திறக்கப்பட்டபோது சுற்றுவட்டார மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை.

1967-ம் ஆண்டில் ரெயில் பாதையில் வெள்ளை சேலை அணிந்தபடி ஒரு பெண் இரவில் சுற்றித் திரிந்ததாகவும், அது தண்டவாளத்தில் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் ஆவி என்றும் மக்கள் பேச தொடங்கினர். தொடக்கத்தில் இதை வதந்தி என்றனர். பின்பு அங்கு ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பீதியை மேலும் அதிகமாக்கியது. ஸ்டேஷன் மாஸ்டர் இறந்த பிறகு, இங்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் வேலை செய்ய மறுத்து விட்டனர். இதனால், இந்த ரெயில் நிலையத்துக்கு ரெயில்கள் செல்லவில்லை. பின்னர் இந்த நிலையத்தை மூடுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்த ரெயில் நிலையத்தை கடந்து செல்லும்போது, ரெயில் பயணிகள் அச்சமடைந்தனர். பின், 1990களில், இந்த ரெயில் நிலையத்தை மீண்டும் தொடங்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 42 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டு ரெயில்வே மந்திரியாக இருந்த மம்தா பானர்ஜியின் முயற்சியால் பெகுன்கோடர் ரெயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இன்று, இந்த நிலையம் ஒரு நிறுத்த நிலையமாக மட்டுமே செயல்படுகிறது. இன்றும் இங்கு ரெயில்வே ஊழியர் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.