;
Athirady Tamil News

2 நாட்களில் புதிய பணிகளை தொடங்கும் “சந்திரயான்-3”: விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு!!

0

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்தது. இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. திட்டமிட்டப்படி விக்ரம் லேண்டர் மற்றும் அதன் உள்ளிருந்த பிரக்யான் ரோவர் ஆகியவை தனது பணிகளை தொடங்கியது. எனவே விஞ்ஞானிகள் திட்டமிட்டப்படி லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை தனது பணிகளை செய்து பூமிக்கு இதுகுறித்த தகவல்களை அனுப்பி வைத்தது. லேண்டர், ரோவர் ஆகியவை சூரிய மின் சக்தியால் இயங்கும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டன.

இதனால் அது நிலவில் சூரிய ஒளி இருக்கும் நேரம் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு அது தரையிறங்கிய இடத்தில் சூரிய ஒளி இருந்தது. அதனை பயன்படுத்தி லேண்டரும், ரோவரும் செயல்பட்டது. சந்திரனின் 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவு இருக்கும். இதை கணக்கீட்டு 14 நாட்கள் தனது பணியை செய்த லேண்டர் மற்றும் ரோவர் சூரிய ஒளி மறையும் தருவாயில் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது இரவு நேர பகுதியாக உள்ளது. எனவே லேண்டரும், ரோவரும் உறக்க நிலையில் இருக்கிறது. இதனால் அவை தற்போது இஸ்ரோவுடன் தொடர்பு இல்லாத நிலை உள்ளது. எனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் அங்கு பகல் வருவதற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் லேண்டரையும், ரோவரையும் வடிவமைக்கும் போதே, மீண்டும் சூரிய ஒளி வரும்போது அவை தன்னை தானே செயல்படுத்தி கொள்ளும் வகையில் உருவாக்கி உள்ளனர். அதன்படி தற்போது விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் நாளை மறுநாள் (22-ந்தேதி) சூரிய ஒளி வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்னும் 2 நாட்களில் சூரிய ஒளி வரும்போது விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் மீண்டும் தன்னை புதுப்பித்து கொண்டு தனது ஆய்வு பணிகள நிலவில் தொடங்கும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து வரும் நிலையில் லேண்டரும், ரோவரும் உறக்கத்தில் இருந்து விழித்து கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் லேண்டர், ரோவர் மீண்டும் ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும் தரவுகள் மூலம் விஞ்ஞானிகள் நிலவு குறித்து மேலும் ஆழமான புரிதல்களை மேற்கொள்ள முடியும் என்றும், இந்த தரவுகள் மூலம் எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சந்திரயான்-3 திட்டத்தின் இவ்வார் ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் சங்கரன் கூறுகையில், இதுவரை நிறைய தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் கிடைக்க சில மாதங்கள் அல்லது 2 வருடங்கள் கூட ஆகும். ஆனால் இந்த தரவுகள் சில புதிய விஷயங்களுக்கு வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விக்ரம் லேண்டர், ரோவர் மீண்டும் விழித்தெழுந்தால் அதிக தரவுகள் கிடைக்கும். அது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.