இந்தியா – கனடா பதற்றம்: தமிழர்கள் சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்ன?
சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான பிரச்னையால், இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? கனடா வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டின் பலதுறை வல்லுநர்கள் சொல்வது என்ன?
கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளதுடன், இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய அரசு கனடா தூதரகத்தின் அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால், கனடா – இந்தியா உறவுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு, பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், கனடாவில் உள்ள தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் கனடா வாழ் தமிழர்கள் மற்றும் இங்குள்ள வல்லுநர்களிடம் பேசியது.
கனடா அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சென்ற 3.1 லட்சம் தமிழர்கள் கனடாவில் குடியுரிமை பெற்று வசிக்கின்றனர்.
ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக கனடா செல்கின்றனர். மேலும், இந்தியாவில் இருந்து ஆடைகள், காய்கறி, இறைச்சி, ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், தென்னை நார் பொருட்கள் எனப் பலவகை பொருட்கள் கனடாவுக்கு ஏற்றுமதியாகிறது. கனடாவில் இருந்து நிலக்கரி சம்பந்தமான பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது.
இந்தியா – கனடா துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தியாவில் இருந்து கனடாவுக்கு ஆண்டுக்கு 370 கோடி ரூபாய் வர்த்தகமும், கனடாவில் இருந்து இந்தியாவுக்கு 277 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி வர்த்தகமும் நடக்கிறது. இதில் கனடாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் வணிகரீதியாக தொடர்புகள் உள்ளன.
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு ஆண்டுக்கு, 55 கோடி ரூபாய்க்கு மேல் பருத்தி, பட்டு போன்ற ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. இதில், 70% திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் இருந்துதான் அனுப்பப்படுகின்றன.
அதேபோல், இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 90 கோடி ரூபாய்க்கு அனுப்பப்படும் தென்னை நார் கட்டிகள், கயிறு, தென்னை நார் சம்பந்தமான பொருட்களிலும், 90% தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்படுகின்றன.
இது தவிர, இரும்பு, எஃகு பொருட்கள், மருத்துவ பொருட்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட மீன், கோழி உள்ளிட்ட இறைச்சிகளும் தமிழ்நாட்டில் இருந்து கனடாவுக்கு ஏற்றுமதியாகின்றன.
கனடா குடிமக்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தால், உண்மையில் அங்கு இருக்கவேண்டுமா என்பது பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது ஆபத்தனதாக இருக்கலம் என கனடா அரசு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், இது வழக்கமான ஓர் அறிவிப்புதான். கனடா அரசு இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் கனடா குடிமக்களுக்கு இத்தகைய பயண அறிவுரையை அவ்வப்போது வழங்கும்.
இந்தியாவில் நிலவும் சூழல்களைப் பொறுத்து தனது குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட இந்தியாவுக்கான பயண அறிவுறுத்தலில் காஷ்மிர் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு கனடிய மக்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
சமீபத்திய இந்திய – கனடா அரசுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் விழுந்ததகத் தொடர்ந்து இந்த பயண அறிவிப்பு பலரால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கனடா அரசு தனது குடியுரிமைத் துறை இணையதளத்தில் நாட்டு மக்களுக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவிற்கு பயணம் செய்யும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பயண வழிகாட்டியில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு கனடா பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில், “கனடா நாட்டவர்கள் இந்தியாவுக்கு சென்றால், சில பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன. எந்தவொரு நிலையும் விரைவில் மாறக்கூடும். எல்லா நேரங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உள்ளூர் ஊடகங்களைக் கண்காணித்து, உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்,” எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனது நோக்கம் இந்தியாவை எதிர்ப்பது அல்ல என்றும், மாறாக இந்தியாவுடன் இணைந்து இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய விரும்புவதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார்.
கனடாவில் எந்த நாட்டினராக இருந்தாலும், குடியுரிமை சட்டத்தின்கீழ் அனைவருக்கும் சமமாக குடியுரிமை வழங்கப்படுகிறது
இந்தியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு கனடா தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் “உங்கள் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம்” என்றும் கூறியுள்ளது. குடும்பத் தேவைகளுக்காக இந்தியப் பயணம் மேற்கொண்டாலும், அது குறித்து முடிவெடுக்கும்போது சிந்தித்து முடிவெடுக்கவும், பயணம் செய்யும் பகுதி குறித்த விரிவான புரிதலுடன் இருக்கவும் இந்த அறிவுரையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கனடா அரசு வெளியிட்டுள்ள பயண அறிவுரையில், அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, கனடா வழங்கியுள்ள அறிவுரையில், நக்ஸலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் தான் இந்தியாவில் பெரும்பாலான தீவிரவாதத் தாக்குதல்களை நடத்துகின்றனர் என்றும், பொதுவாக கிராமப்புறங்கள் மற்றும் வனப்பகுதிகளில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் தாக்குதல் ஆபத்து ஆந்திர பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகள் கனடாவில் அதிகரித்து வருவதாகவும் அதைக் கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் அனைத்து இந்தியர்கள் மற்றும் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான செயல்களை கண்டித்த கனடா வாழ் இந்திய சமூகத்தினரின் சில பிரிவினர்களும், அங்குள்ள தூதரக அதிகாரிகளும் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அங்கு பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
“கனடா வாழ் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, இந்திய தூதரக உயரதிகாரிகள், கனடிய அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
கனடாவில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், ஓட்டாவாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திலோ அல்லது டொரான்டோவில் உள்ள தூதரகத்திலோ தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்துகொள்ளும்படியும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Madad.gov.in என்ற இணையதளத்திலும் இந்தியர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரும்பதகாத நிகழ்வுகள் ஏதேனும் நடந்தாலோ, அவசர தேவைகளின்போதோ தூதரக அதிகாரிகள் தொடர்புகொள்ள வசதியாக, இந்தியர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவது அவசியம் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
கனடாவின் ஆண்டாரியோ நகரில் வசித்து வரும் வழக்கறிஞரும் CANext Immigration நிறுவன தலைமை செயல் அலுவலருமான நடராஜ் ஸ்ரீராம்.
இந்தியா – கனடாவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், குடியேற்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்புகள் ஏற்படாது என பிபிசி தமிழிடம் விளக்கினார், கனடாவின் ஆண்டாரியோ நகரில் வசித்து வரும் வழக்கறிஞரும் CANext Immigration நிறுவன தலைமை செயல் அலுவலருமான நடராஜ் ஸ்ரீராம்.
“கனடா வந்தோரை வாழ வைக்கும் மனநிலை கொண்ட நாடு. மற்ற நாடுகளில் குடியுரிமை வழங்க, அங்கு தங்கியிருக்கும் ஒவ்வொரு நாட்டினரையும் ஒவ்வொரு வகையாகப் பிரித்துப் பார்த்து, ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு வகையான கட்டுப்பாடுகளை விதித்துதான் குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஆனால், கனடாவில் அத்தகைய பாரபட்சம் எதுவும் கிடையாது. எந்த நாட்டினராக இருந்தாலும், குடியுரிமை சட்டத்தின்கீழ் அனைவருக்கும் சமமாக குடியுரிமை வழங்கப்படுகிறது,” என்கிறார் ஸ்ரீராம்.
மேலும், “கனடாவில் குடியுரிமை வழங்குவதற்கான ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இது அரசியல் ரீதியாகச் செயல்படுவது இல்லை என்பதால், தற்போது இந்தியா – கனடாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை எந்த வகையிலும், தமிழர்கள், இந்தியர்கள் கனடாவுக்கு கல்வி, வேலைவாய்ப்புக்காக வருவதிலும், குடியுரிமை பெறுவதிலும், விசா வாங்குவதிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார் நடராஜ் ஸ்ரீராம்.
இதற்குச் சான்றாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா, சீனாவுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் பிரச்னையைக் குறிப்பிட்டார். அப்போதும்கூட, எந்தப் பாதிப்பையும் அது ஏற்படுத்தவில்லை என்று ஸ்ரீராம் விளக்கினார்.
மேலும் பேசிய வழக்கறிஞர் நடராஜ் ஸ்ரீராம், கனடா அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தியாவில் இருந்து, 2022இல் மட்டுமே கனடாவுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றத்துக்காக, 3 லட்சம் பேர் வந்துள்ளதாகத் தெரிவித்தார். கனடாவுக்கு கல்வி, வேலைவாய்ப்புக்காக வருவோரில், 90% இந்தியர்கள்தான் என்றும் இதில், தமிழர்கள் மிக அதிகம் என்றும் கூறுகிறார் அவர்.
“முன்பு கனடாவில் தமிழர்கள் என்றாலே, இலங்கைத் தமிழர்கள் என்ற நிலைதான் இருந்தது. ஆனால், 2001க்குப் பின் தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான தமிழர்கள் இங்கு வருகின்றனர்.
ஆண்டுக்கு குறைந்தபட்சமாக, 50,000 ஆயிரம் பேராவது தமிழ்நாட்டில் இருந்து கனடா வருகின்றனர். கனடா நாட்டினரைவிட, 3 – 4 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி இந்திய மாணவர்கள் இங்கு படிப்பதால், கனடாவின் பொருளாதாரத்துக்கு இந்தியா மிக முக்கியப் பங்காற்றுகிறது.
இதன் காரணமாக இந்தியர்கள் இங்கு வருவதை கனடா ஒருபோதும் தடுக்காது. அந்த வகையில் தமிழர்களுக்குப் பாதிப்பிருக்காது,” என்றார்.
சீக்கியத் தலைவர் கொலைக்குப் பிறகு கனடாவில் இந்தியர்கள் நிலை என்ன என்ற கேள்வியை நாம் முன்வைத்தபோது விளக்கமளித்த நடராஜ் ஸ்ரீராம், “சீக்கியத் தலைவர் கொலைக்கு முன் இங்கு எப்படியான சூழல் நிலவியதோ, தற்போதும் அதேபோன்ற சாதாரண நிலைதான்,” என்றார்.
“இந்தக் கொலை சம்பவத்துக்குப் பிறகு எந்த மாற்றமும் இல்லை. இந்தியர்கள், சீக்கியர்கள் என அனைவரும் சாதாரணமாகத்தான் உள்ளனர். அரசியல்வாதிகள் இந்தக் கொலையைப் பேசுகிறார்களே தவிர, மக்கள் மத்தியில் எந்த மாற்றமும் இல்லை,” என்றார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் ஏன் கனடாவை தேர்வு செய்கின்றனர் என்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார், வெளிநாட்டுக் கல்விக்கு பயிற்சியளிக்கும் ‘ட்ரூ மேடிக்ஸ்’ பயிற்சி மையத்தின் தலைவர் சுரேஷ்குமார்.
விசா பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் ஏன் கனடாவை தேர்வு செய்கின்றனர் என்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார், வெளிநாட்டுக் கல்விக்கு பயிற்சியளிக்கும் ‘ட்ரூ மேடிக்ஸ்’ பயிற்சி மையத்தின் தலைவர் சுரேஷ்குமார்.
“உலக நாடுகளில் கனடாவில் மட்டுமே, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அங்கு தங்கிப் படித்து, வேலை பார்த்தால் அந்நாட்டின் நிரந்தர குடியுரிமையைப் பெறும் வாய்ப்புள்ளது. இதுவே அமெரிக்காவில் 15 ஆண்டுகளாகவும், பிரிட்டனில் 5 ஆண்டுகளாகவும் உள்ளது.
இந்த காரணத்தால், இந்தியாவில் இருந்து அதிகப்படியானோர் கனடாவை தேர்வு செய்கின்றனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக மட்டுமே, தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு, 40 ஆயிரம் பேருக்கு மேல் கனடா செல்கின்றனர்,” என்கிறார்.
இந்நிலையில், இந்தியா – கனடா பிரச்னையால், புதிதாக கனடா செல்லும் மாணவர்கள், பணிக்காக செல்வோருக்கு பாதிப்புகள் ஏற்படும் என்கிறார் சுரேஷ்குமார்.
“இந்தியா – கனடா பிரச்னை தீவிரமடைந்து அந்த நாடு இதைப் பெரிதுபடுத்தினால், இந்தியாவில் உள்ளோருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை அங்கு இந்தியர்களுக்கு விசா தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பாதிப்புகள் ஏற்படும்,” என்கிறார் அவர்.
மேலும் பேசிய அவர், “ஜனவரி மற்றும் மே மாதம் என ஆண்டுக்கு இருமுறை, தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் மேற்படிப்புக்காக கனடா செல்கின்றனர்.
ஜனவரியில் கனடா செல்ல தயாராகவுள்ள, 90% மாணவர்கள் தற்போது விசா பெற்றிருப்பார்கள். ஆனால், இரு நாடுகளின் பிரச்னை வலுப்பெற்றால் மே மாதம் செல்லவிருப்போர், விசா பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டு, பல மாணவர்கள் கனடா செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
மாணவர்கள் மட்டுமின்றி, அங்கு பணிக்குச் செல்ல விரும்புவோரும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள். கனடாவில் கட்டுப்பாடுகள் அதிகரித்தால், மாணவர்களும், வேலைவாய்ப்புக்காக செல்வோரும் பிரிட்டன் நாட்டைத் தேர்வு செய்ய நேரிடும்,” என்றார்.
கனடா போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கான வணிகத் தொடர்பு மிகக்குறைவுதான் என்று கூறுகிறார் பொருளாதார வல்லுநருமான வெங்கடேஷ் ஆத்ரேயா.
இந்தியா – கனடா பிரச்னையால் தமிழகத்துக்குப் பொருளாதார ரீதியில் பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்களும், தொழில்துறையினரும்.
பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியரும் பொருளாதார வல்லுநருமான வெங்கடேஷ் ஆத்ரேயா, கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா, அமெரிக்காவுடன்தான் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிக நெருக்கமாக உள்ளது என்றும் கனடா போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கான வணிகத் தொடர்பு மிகக்குறைவுதான் என்றும் கூறினார்.
“இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நடக்கும் ஏற்றுமதியும், இறக்குமதியும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகக்குறைவுதான். தற்போது, ஏற்பட்டுள்ள இருநாடுகளின் பிரச்னையால் பொருளாதார ரீதியிலும், வணிக ரீதியிலும் மிகச்சிறிய தற்காலிக பாதிப்பு மட்டுமே ஏற்படும், பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது.
இந்தியா – கனடா இடையே தொழில் மேம்பாட்டுக்கான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாவது போன்ற நிலை இருந்தது. பத்தாண்டுகளாக நடக்காத இந்த முயற்சி, இந்தப் பிரச்னையால் மேலும் தாமதமாகக்கூடும்,” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய தென்னிந்திய பொறியியல் (Engineering) இயந்திரங்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் விக்னேஷ், தமிழகத்தில் உற்பத்தியாகும் பொறியியல் சார்ந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்கள், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குத்தான் அதிக அளவில் அனுப்பப்படுகின்றன என்றும், கனடாவுக்கு சொல்லும்படியாக பெரிய அளவில் வர்த்தகம் இல்லை என்றும் கூறினார்.
“இதனால், இந்தியா – கனடா பிரச்னையால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதும் இல்லை,’’ என்கிறார் அவர்.
இதேபோல், திருப்பூர் ஆடைகள் ஏற்றுமதியாளரான குமார் துரைசாமி, “தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மொத்த பருத்தி ஆடை பொருட்களில், 4% என்ற குறைவான அளவுதான் கனடாவுக்கு ஏற்றுமதியாகிறது. இருநாட்டு பிரச்னையால் ஆடைத் தொழில் ரீதியில் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு இருக்காது,” என்று தெரிவித்தார்.